குறைவான பட எண்ணிக்கை; பல்லாண்டு கால பட அனுபவம்… கவனம் ஈர்க்கும் ஜி.எம்.சுந்தர்

Published On:

| By christopher

Character Artist G M Sundar

ஜி.எம்.சுந்தர். தற்போதிருக்கும் குணசித்திர நடிகர்களில் நீண்ட கால அனுபவத்தையும் குறைவான பட எண்ணிக்கையையும் தன்னகத்தே கொண்டவர். சுமார் 40 ஆண்டுகளாகத் திரையுலகில் வலம் வருபவர். இப்போதும் தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்காகத் தயாராவதில் அதிக சிரத்தையைக் காட்டுபவர். இப்படி இவரைப் பற்றிச் சொல்வதற்கான விஷயங்கள் நீள்கின்றன. Character Artist G M Sundar

ஜி.மீனாட்சி சுந்தரம். இதுவே இவரது இயற்பெயர். இந்தப் பெயரில் ‘உருமாற்றம்’ எனும் குறும்படத்தைத் தயாரித்திருக்கிறார். சுற்றுச்சூழல் நலம் பேசும் அப்படைப்பு, 2003ஆம் ஆண்டு தேசிய விருதைப் பெற்றது. Character Artist G M Sundar

சுந்தரைப் பற்றிய தனிப்பட்ட குறிப்புகள் ஏதும் இணையத்தில் கிடைப்பதில்லை. ஆனால், ஒவ்வொரு இணையப் பக்கத்திலும் ஏதாவது ஒரு விஷயம் புதிதாகத் தென்படுகிறது. அதுவே, இவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் பெரிதாக ஈடுபடவில்லை என்பதைக் காட்டுகிறது.

அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர் ஜி.எம்.சுந்தர். அங்கு இவரோடு பயின்றவர்களில் முக்கியமான திரைக்கலைஞர்கள் நாசர் மற்றும் அர்ச்சனா. ரகுவரன், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் இவருக்கு சீனியர்கள். அந்த வரிசையில் ரஜினி, சிரஞ்சீவி எல்லாம் அதன் ‘அலும்னி கிளப்’ உறுப்பினர்கள் தாம். Character Artist G M Sundar

எண்பதுகளில் கூத்துப்பட்டறை நாடகக் குழுவில் சேர்ந்து இயங்கியிருக்கிறார் சுந்தர். அப்போது சில நாடகங்களில் நடித்திருக்கிறார். எழுத்தாளர் ஞானியின் ‘பரீக்‌ஷா’ குழுவோடு சேர்ந்தியங்கிய அனுபவமும் இவருக்குண்டு. Character Artist G M Sundar

இந்த நாடக அனுபவங்கள் வழியே இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார் ஜி.எம்.சுந்தர். அப்படித்தான் ‘புன்னகை மன்னன்’ படத்தில் இவரது திரைப்பிரவேசம் நிகழ்ந்தது. அதன் வழியே கமல்ஹாசனின் நட்பும் கிடைத்திருக்கிறது. பிறகு அவர் தயாரித்த ’கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘சத்யா’ படங்களில் நடித்திருக்கிறார்.

அவற்றைத் தொடர்ந்து புலன் விசாரணை, காவலுக்கு கெட்டிக்காரன், கிழக்கு கரை, நண்பர்கள், தங்கமனசுக்காரன், பொன்னுமணி, அதர்மம் என்று ஆண்டுக்கு ஓரிரு படங்களில் மட்டுமே தலைகாட்டியிருக்கிறார். அந்த அளவுக்குத் தான் நடிக்கும் கதைகள், கதாபாத்திரங்களை நின்று நிதானித்து தேர்ந்தெடுத்திருக்கிறார். அதன் காரணமாக, திரை வாழ்வில் அவ்வப்போது பல இடைவெளிகளையும் எதிர்கொண்டிருக்கிறார்.

அதன்பிறகான சுமார் 18 ஆண்டுகளில் கிழக்கும் மேற்கும், ஊருக்கு நூறு பேர், தொட்டி ஜெயா ஆகிய படங்களில் மட்டுமே ஜி.எம்.சுந்தர் நடித்திருக்கிறார்.

அப்போதும் தனது சொந்த தொழில், குடும்பம், நட்பு வட்டம், திரைப்பட ரசனை என்றே இருந்திருக்கிறார். Character Artist G M Sundar

2016இல் மீண்டும் ‘காதலும் கடந்து போகும்’ மூலமாக ஜி.எம்.சுந்தர் மீது கேமிரா வெளிச்சம் விழுந்தது. அதுவரை வில்லத்தனமான, குணசித்திர பாத்திரங்களை ஏற்று நடித்தவர், அதில் நகைச்சுவை நடிப்பை ஒரு கை பார்த்தார். அந்த பரிமாணம் அதுவரை தமிழ் ரசிகர்கள் காணாதது. பிறகு, அதுவே அவரது அடையாளங்களில் ஒன்றானது.

தொடர்ந்து சீதக்காதி, மகாமுனி, மண்டேலா, சார்பட்டா பரம்பரை, ரைட்டர், ஜெய்பீம், வலிமை, விருமன், துணிவு, அமிகோ கேரேஜ், ரசவாதி என்று தொடர்கிறது ஜி.எம்.சுந்தரின் பிலிமோகிராஃபி. ‘வேட்டையன்’ படம் மூலமாக ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்தார்.

இடைப்பட்ட காலத்தில் ‘ஜன கண மன’ எனும் மலையாளப் படத்திலும் வில்லனாகத் தோன்றினார்.

இப்போதெல்லாம் ‘இவர் ஒரேமாதிரியாகத் திரையில் வந்து போகிறாரோ’ என்றெண்ணும் அளவுக்கு சுந்தர் ஏற்கும் பாத்திரங்கள் ஒரேமாதிரியாகத் தெரிகின்றன. அவர் நடித்த படங்களின் இயக்குனர்கள் மட்டுமே அதற்குப் பொறுப்பு. Character Artist G M Sundar

நடிப்பைப் பொறுத்தவரை, உலக சினிமாவின் இலக்கணங்களைக் கற்றறிந்தவர் சுந்தர். இலக்கியங்களாகப் போற்றப்படுகிற சினிமாக்களை கரைத்துக் குடித்தவர். அதனால், ‘யதார்த்தத்திலும் அரியதொரு இயல்பை’த் தனது நடிப்பில் வெளிப்படுத்துகிற பாங்கு அவரிடத்தில் உண்டு. அதுவே அவரது தனித்துவம்.

சில படங்களில் ஜி.எம்.சுந்தர் வெளிப்படுத்தும் உடல்மொழி அலட்சியமும் அகங்காரமும் கொண்டதாகத் தென்பட்டிருக்கிறது. காந்தமாக ஈர்க்கும் அவரது கண்களும் உதட்டோரச் சிரிப்பும் தந்திரத்தைக் கசியச் செய்கிற உடல்மொழியும், அவருக்கு குயுக்தி நிறைந்த பாத்திரங்களைப் பெற்றுத் தந்திருக்கின்றன.

வித்தியாசமான வில்லன் வேடங்களைத் தவிர்த்து, தினசரி வாழ்வில் நாம் சந்திக்கிற சில மனிதர்களாக, மிகச்சாதாரணமாகச் சுந்தர் திரையில் வெளிப்பட வேண்டும். அதுவே நமது விருப்பம். அதிலும் கைத்தட்டல்களை அள்ளுகிற திறமை அவரிடத்தில் உண்டு.

குறிப்பிட்ட இடைவெளிக்குப்பிறகு கேமிரா முன்பாக நின்றாலும், இன்றைய தலைமுறை இயக்குனர்களோடும் கைகோர்க்கிற மனப்பாங்கு ஜி.எம்.சுந்தரிடத்தில் இருக்கிறது. இது, பல கலைஞர்களிடம் கரைந்து காணாமல் போயிருக்கும். இவரைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட தவறுகளுக்கு இடமில்லை. இவரது நடிப்புத் தாகம் தான் அதனை வற்றாமல் கண்காணித்து வருகிறது.

தன்னுடைய பலம், பலவீனம் இரண்டையும் தெளிவாக அறிந்த நடிப்புக்கலைஞர்களில் ஒருவர் ஜி.எம்.சுந்தர்.

இப்போதுவரை, ’சார்பட்டா பரம்பரை’ துரைக்கண்ணு வாத்தியாரைத்தவிர அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்குப் பெரிதாகப் படங்கள் ஏதும் வரவில்லை. ஆனால், ‘வரும் ஆண்டுகளில் அந்த மாற்றம் நிகழும்’ என்று உறுதிபடச் சொல்கிற அளவுக்குத் திரைத்துறையின் இயக்கத்தோடு ஒத்திசைவை வெளிப்படுத்துகிற திறமையும் நிதானமும் சுந்தரிடம் உண்டு. அவரது தனித்துவத்தைப் போற்றுகிற பாத்திரங்களைப் பெற்று எதிர்காலத்தில் மேலும் பல மடங்கு அவரது திறமை ஒளிவீசட்டும்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share