நடிப்பு வாழ்வுக்கு கற்றலே அடிப்படை என்று சொல்லும் சேத்தன்!
சேத்தன். திரையிலும் தொலைக்காட்சியிலும் நாம் கண்ட நடிப்புக் கலைஞர்களில் இருந்து குறிப்பிட்ட அளவில் விலகித் தோற்றமளிப்பவர். அதேநேரத்தில், எந்தக் கதாபாத்திரமானாலும் திறம்பட நடிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ரசிகர்களிடத்தில் விதைத்தவர். தனது கேரியரின் தொடக்க காலத்திலேயே அப்படியொரு எண்ணத்தை ஏற்படுத்தியதுதான் அவரது சாதனை. character artist actor chetan life in cinema
தனக்குக் கிடைத்த வாய்ப்புகளின் வழியே, அவர் அமைத்துக்கொண்ட வலுவான அடித்தளமே, சுமார் முப்பது ஆண்டுகளாக நடிப்புலகில் வெற்றிகரமாக உலா வரச் செய்து கொண்டிருக்கிறது.
கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்து வளர்ந்தவர் சேத்தன். அந்த மண்ணுக்கே உரிய கலை, கலாசார அம்சங்களோடு அங்கிருந்த மனிதர்களின் இயல்புகளையும் உள்வாங்கினார். அதன் விளைவாக, நடிப்புலகில் பிரவேசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைச் சிறுவயதிலேயே வார்த்தெடுத்தார்.
பள்ளி, கல்லூரி படிப்புக்குப் பிறகு நடிப்பை நோக்கிய தேடல் அவரைப் பெங்களூருவுக்கு அழைத்துச் சென்றது. தகுந்த வாய்ப்புகள் அமையாமல் தவித்த சேத்தனுக்கு ஆறுதல் தரும் வகையில் ஒருநாள் அமைந்தது.
ராமாயணம்’ தொடரில் உதவி இயக்குனராகப் பணியாற்றுகிற வாய்ப்பு அது. சேத்தனின் நண்பருக்கு வந்த வாய்ப்பு. அவர் அதனை சேத்தனுக்கு விட்டுத் தந்தார்.
சென்னை வந்த சேத்தனுக்கு தடங்கல்! character artist actor chetan life in cinema
அதன் தொடர்ச்சியாக, அந்த தொடரில் பணியாற்றுவதற்காகச் சென்னை வந்தார் சேத்தன்.
1995ஆம் ஆண்டு. சென்னை வந்திறங்கிய சேத்தனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ‘ராமாயணம்’ தொடரில் பணியாற்றச் சேர்ந்து, கேமிராவுக்கு பின்னிருக்கும் வித்தைகளைக் கற்றுக்கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு தடை முளைத்தது. சில காரணங்களால் அந்த தொடர் நின்றுபோனது.
அந்த காலகட்டத்தில், நண்பர் வீடே சேத்தனுக்குப் புகலிடமாகிப் போனது. அங்கிருந்துகொண்டு, தினமும் நடிக்க வாய்ப்பு தேடிச் செல்வது அவரது வாழ்க்கையாக மாறியது.

சின்னத்திரையைக் கவர்ந்த மாணிக்கம்! character artist actor chetan life in cinema
பல மாதங்கள் தொடர்ந்து மேற்கொண்ட தேடலின் பயனாக, ஒருநாள் மின்பிம்பங்கள் அலுவலகத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. வாய்ப்பு தேடி சந்தித்தவர்களில் ஒருவரான இயக்குனர் நாகா எதிர்முனையில் பேசியிருக்கிறார். ‘ஒரு பாத்திரம் இருக்கு நடிக்குறீங்களா’ என்று கேட்டிருக்கிறார்.
அந்தக் கணம் முதல் சேத்தன் வாழ்வு திசைமாறியது.
‘மர்மதேசம் விடாது கருப்பு’ தொடரில் ராஜேந்திரனாகவும் கருப்பசாமியாகவும் நடித்தார் சேத்தன். மல்டிபிள் பெர்சனாலிட்டி டிசார்டர் எனும் மனநோய் குறைபாடு உடைய பாத்திரம். கிளைமேக்ஸில் அந்த சஸ்பென்ஸ் உடைந்த தருணத்தில், அந்த தொடரை ரசித்தவர்கள் மட்டுமல்லாமல் அதில் சம்பந்தப்பட்டிருந்த குழுவினரும் கூட அரண்டு போனார்கள். ‘இவரா அவர்’ என்று திகைத்துப் போனார்கள்.
தொடக்கத்திலேயே அப்படியொரு பாத்திரத்தைப் பெற்றது சேத்தனின் பாக்கியம். தொடர்ந்து இயந்திரப் பறவை, நிம்மதி உங்கள் சாய்ஸ், இரண்டாம் சாணக்கியன், வாழ்க்கை உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.
பஞ்சவர்ணக்கிளி, ஆனந்த பவன் தொடர்களில் நடித்தபோது இயக்குனர் திருமுருகனோடு பழகும் வாய்ப்பு சேத்தனுக்கு வாய்த்தது. கூடவே, ஒரு நடிகராக எப்பேர்ப்பட்ட கனத்தை அவர் தாங்குவார் என்பதை திருமுருகன் அறியவும் நேர்ந்தது.
அதன் தொடர்ச்சியாக, மெட்டி ஒலி தொடரில் மாணிக்கமாகத் தோன்றினார் சேத்தன். குடும்பங்கள் பலவற்றால் அவர் மாணிக்கமாகக் கொண்டாடப்பட்டது அந்த தொடருக்குக் கிடைத்த வெற்றி.
பிறகு ரமணி வெர்சஸ் ரமணி, ஆடுகிறான் கண்ணன், மலர்கள், அத்திப்பூக்கள், என் பெயர் ரங்கநாயகி, ருத்ர வீணை, உதிரிபூக்கள் என்று பல தொடர்களில் இடம்பெற்றார் சேத்தன்.

வெள்ளித்திரையில் பதிந்த சேத்தன் character artist actor chetan life in cinema
தொடர்களில் நடிக்கத் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்தபோதும், ஒருகட்டத்தில் சின்னத்திரையில் இருந்து சற்றே விலகி நிற்கலாம் என்று முடிவெடுத்தார் சேத்தன். அதற்குத் தகுந்தாற்போல, 2000களின் பிற்பாதியில் அவரைத் தேடி சில பெரிய திரை வாய்ப்புகளும் வந்தன.
தமிழ், கன்னடத்தில் உருவான ’ஹெச்2ஓ’ தான் சேத்தன் நடித்த முதல் திரைப்படம்.
என்றபோதும், ‘பொல்லாதவன்’ படத்தில் தனுஷ் பணியாற்றும் நிறுவனத்தின் மேலாளராக நடித்தது நல்லதொரு அறிமுகத்தை அவருக்குப் பெற்றுத் தந்தது.
தொடர்ச்சியாக தாம்தூம், படிக்காதவன், ராஜாதிராஜா என சில படங்களில் சீரியசான பாத்திரங்களில் நடித்த சேத்தன், 2014இல் வெளியான ‘ஆடாம ஜெயிச்சோமடா’ படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் தோன்றினார்.
பின்னாட்களில் ‘தமிழ்படம் 2’விலும் அதே போன்றதொரு அனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்தார்.
அழகு குட்டி செல்லம், நிபுணன், ஹவுஸ் ஓனர், கைதி, மாஸ்டர், குதிரைவால் என்று குறிப்பிடத்தக்க படங்களில் இடம்பெற்றபோதும், சேத்தனின் பாத்திரத் தேர்வுகள் விரல் விட்டு எண்ணத்தக்க அளவிலேயே இருந்திருக்கிறது. ஆண்டுக்கு இரண்டு, மூன்று திரைப்படங்களில் நடித்தால் அதிகம் என்ற நிலையிலேயே அவரது தேர்வுகள் இருந்தன.

கற்றலுக்கு எப்போதும் தயாராக இரு!
2023ஆம் ஆண்டு அவரது முடிவு சரி என்பதை உணர்த்தியது. அயோத்தி, விடுதலை பாகம் 1 ஆகிய திரைப்படங்களில் சேத்தன் தோன்றினார்.
காவல் துறை அதிகாரி ராகவேந்தராக, வெற்றிமாறனின் ‘விடுதலை’யில் தோன்றியது அவரது நடிப்பு வாழ்வில் ஒரு மைல் கல் சாதனை.
அது மிகச்சாதாரணம் என்று நினைக்கும் அளவுக்கு, ‘ஜமா’வில் கூத்துக்கலைஞர் தாண்டவமாக நடித்திருந்தார். தொடர்ந்து ‘விடுதலை 2’விலும் அசத்தலான பெர்பார்மன்ஸை தந்திருந்தார்.
உடலும் மனமும் ஆன்மாவும் ஒருசேர வளைந்து நெளிய வயது ஒரு பொருட்டல்ல என்றுணர்த்துகிறது திரையுலகில் சேத்தன் கடந்து வந்த பாதை. காரணம், கற்றலுக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டுமென்ற அவரது பால பாடம்.
ஒரு நடிகராகவும், இயக்குனராகவும் சேத்தன் மேலும் பல சாதனைகள் புரியலாம். அதற்கான வாய்ப்புகள் அனேகம் என்பதை நமக்கு உணர்த்தியிருக்கின்றன அவர் நடித்த சமீபகாலத் திரைப்படங்கள். அவற்றில் நமக்குக் கிடைத்த திரையனுபவம் இனிவரும் நாட்களிலும் தொடரட்டும்..!
உதயசங்கரன் பாடகலிங்கம்