டிஜிட்டல் திண்ணை: மா.செ.க்கள் மேயர்கள் மாற்றம்… ஸ்டாலின் திடீர் மூவ்!

Published On:

| By Aara

Change of district secretaries mayors... Stalin's sudden move

வைஃபை ஆன் செய்ததும் மும்பையில் இந்தியா கூட்டணி கூட்டத்தில் ஸ்டாலின் ஆற்றிய உரையின் வீடியோ வந்து விழுந்தது.

அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

ADVERTISEMENT

“திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழுவில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான, இந்தியா அணியை ஆரம்பத்தில் இருந்து வளர்த்தெடுப்பதில் ஆர்வமும் அக்கறையும் காட்டியவர் ஸ்டாலின். அந்த அடிப்படையில் இந்தியா கூட்டணியின் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவில் ஸ்டாலின் இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் தேசிய அரசியலில் அதிகாரப்பூர்வமான முதல் பொறுப்பை ஏற்றிருக்கிறார் ஸ்டாலின்.

இந்திய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு ஸ்டாலினுக்கு இருக்கும் நிலையில்… அதேநேரம் தமிழ்நாட்டிலும் 2019 போல மீண்டும் ஒரு வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஸ்டாலின். இதனால் தேர்தல் பணிகளை சுமுகமாகவும் சுறுசுறுப்பாகவும் பார்க்க மாவட்டச் செயலாளர்கள் விவகாரத்தில் அதிரடி மாற்றத்திற்கு ஸ்டாலின் தயாராகிக் கொண்டிருப்பதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

திமுகவில் தற்போது 72 மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். 234 சட்டமன்ற தொகுதிகளையும் இந்த 72 மாவட்ட செயலாளர்கள் தான் கட்சி அளவில் நிர்வகிக்கிறார்கள். இவர்களில் சிலருக்கு நான்கு தொகுதிகள், சிலருக்கு ஐந்து தொகுதிகள், சிலருக்கு மூன்று தொகுதிகள் என்று அவரவர் மாவட்ட எல்லை அமைக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்த மைக்ரோ மேனேஜ்மென்ட் அடிப்படையில் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற ஃபார்முலாவை தமிழ்நாடு முழுமைக்கும் அமல்படுத்தலாமா என்ற ஆலோசனை தான் தற்போது திமுக வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. மூன்று, நான்கு, ஐந்து தொகுதிகள் வைத்திருக்கும் மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக பல்வேறு கோஷ்டிகள் அறிவாலயத்தில் புகார் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT

உதாரணத்துக்கு நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் மீது சபாநாயகர் அப்பாவு ஆதரவாளர்கள் தொடர்ந்து புகார் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த வாரம் அவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினையே சந்தித்து புகார் கொடுத்தனர். அதற்கு ஓரிரு நாட்களுக்குப் பிறகு ஆவுடையப்பனும் சென்னைக்குச் சென்று ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பின் அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் கட்சி அளவில் மாவட்ட மறு சீரமைப்பு நடக்கப் போகிறது என்ற தகவல்கள் இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன.

ஆவுடையப்பனின் சீனியாரிட்டியும் கண்ணியமும் பாதிக்கப்படாத வகையில் அவருக்கு மாநில அளவில் பொறுப்பு கொடுப்பது என்றும்.. அவரிடம் இருந்த அம்பாசமுத்திரம் மற்றும் ஆலங்குளம் தொகுதிகளை இணைத்து சமீபத்தில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சிவ பத்மநாபனிடம் கொடுப்பது எனவும்… ராதாபுரம், நாங்குநேரி தொகுதிகள் அடங்கிய மாவட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு பரிந்துரைப்பவரை மாவட்ட செயலாளராக நியமிப்பது என்றும் அறிவாலயத்தில் ஆலோசனைகள் நடந்து கொண்டுள்ளன. செப்டம்பர் முதல் வாரத்தில் நல்ல செய்தி வரும் என்று ஆவுடையப்பனுக்கு எதிராக புகார் கொடுத்தவர்களிடம் சொல்லி அனுப்பி இருக்கிறார் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி.

இதே போல சென்னையில் சேகர்பாபு, மாசு வில் தொடங்கி ஈரோட்டில் முத்துசாமி வரை அதிக தொகுதிகளை வைத்திருக்கும் மாவட்ட செயலாளர்களிடமிருந்து தொகுதிகளை பிரித்து பகிர்ந்து அளிப்பது பற்றிய பட்டியலும் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஈரோட்டில் பெருந்துறை, மொடக்குறிச்சி தொகுதிகள் அடங்கிய மாவட்ட பொறுப்பை இளைஞரணி மாநில துணைச் செயலாளரான ஈரோடு பிரகாஷிடம் கொடுப்பது என்றும் ஒரு ஆலோசனை அறிவாலயத்தில் சூடு பிடித்து வருகிறது. அதாவது சீனியர்களிடம் குவிந்து கிடக்கும் தொகுதிகளை நிரவி… இளைஞர் அணி நிர்வாகிகளிடம் கொடுத்து அவர்களை மாவட்ட செயலாளர்கள் ஆக்குவது என்பதுதான் உதயநிதி முதலமைச்சர் ஸ்டாலினிடம் முன் வைத்துள்ள திட்டமாக இருக்கிறது.

இந்த அடிப்படையில் 234 தொகுதிகளையும் இரண்டு தொகுதி ஒரு மாவட்டம் என்ற கணக்குப் படி பிரித்து 117 மாவட்ட செயலாளர்கள் என்ற அளவுக்கு இல்லாவிட்டாலும்… தற்போது இருக்கும் 72 மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி உயர்த்தப்படுபவர்களில் கணிசமானவர்களை இளைஞர் அணியில் இருந்து மாவட்ட செயலாளராக நியமிப்பது தான் இப்போது நடந்து கொண்டிருக்கும் ஆலோசனை என்கிறார்கள்.

அதேபோல திமுக மேயர்களுக்கு திமுக கவுன்சிலர்களே பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்கும் கலாச்சாரம் நெல்லையில் தொடங்கி கோவை என நீண்டு கொண்டிருக்கிறது. நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே பகிரங்கமாக தலைமைக்கு கடிதம் எழுதினார்கள். கோவை மேயர் கல்பனாவுக்கு எதிராக திமுக மண்டல தலைவர் மீனா லோகுவே பகிரங்க புகார் தெரிவித்துள்ளார். மதுரை மேயர் இந்திராணி அமைச்சர் பி டி ஆரின் ஆதரவாளர் என்பதால் அவரை மாற்றுமாறு அமைச்சர் மூர்த்தி தரப்பினர் தலைமையை வற்புறுத்தி வருகிறார்கள்.

இவ்வாறு மேயர்கள் விவகாரத்திலும் தொடர்ந்து உட்கட்சிப் பூசல் பூதாகரமாகிக் கொண்டிருப்பதால் திமுக மேயர்களையும் மாற்றும் ஆலோசனை அறிவாலயத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை சுமுகமாக மேற்கொள்வதற்கு ஏதுவாக மாவட்ட செயலாளர்கள், மேயர்கள் மாற்றங்கள் வரலாம் என்பதுதான் தற்போதைய அறிவாலய நிலவரம்” என்ற மெசேஜ் க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

மும்பை சிறுமி ஆசையாக வைத்த கோரிக்கை: நிறைவேற்றிய ஸ்டாலின்

ஒரே நாடு… ஒரே தேர்தல்: ஸ்டாலின், எடப்பாடி போடும் கணக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share