சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதம் 14ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது.
பூமியில் இருந்து 3 லட்சத்து 84,000 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவு குறித்து ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி நிலவுக்கு சந்திரயான்-1 என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
சந்திரயான்-1 நிலவில் செய்த ஆய்வில் அங்கு தண்ணீர் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், தென் துருவத்தில் விக்ரம் லேண்டரின் மெதுவான தரையிறக்கம் (சாப்ட் லேண்டிங்) சவாலாக மாறியது.
சந்திரயான்-2 கடைசி கட்டத்தில் நிலவில் இறங்கும்போது அதன் கட்டுப்பாட்டை இழந்து நிலவுடன் மோதியது. இதனால் சந்திரயான்-2 பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் தோல்வியில் துவண்டுவிடாமல் தொடர்ந்து ரூ.615 கோடி செலவில் சந்திரயான்-3 திட்டம் அறிவிக்கப்பட்டது.
தற்போது பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் நிறைவு செய்துள்ளனர். ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலம் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்படுகிறது.
இந்த ராக்கெட் 43.5 மீட்டர் நீளமும், 640 டன் எடையும் கொண்டது. திட, திரவ, கிரையோஜெனிக் என 3 நிலைகளில் எரிபொருள் உதவியால் ராக்கெட் விண்ணில் பாயும். மார்க்-3 ராக்கெட்டின் அனைத்து பரிசோதனைகளும் நிறைவு பெற்று தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் சந்திரயான்-3 விண்கலம் வரும் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து அதிக எடையை தாங்கி செல்லும் மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் வரும் 14ஆம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இந்தப் பாய்ச்சல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ராஜ்
அமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ள Co-Op Bazaar App: என்ன விசேஷம்?
