இந்தியாவின் ‘சந்திரயான் 3’ மிஷன் வெற்றி பெற்றுள்ளது. நாட்டு மக்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்தியாவிற்கு மிகப்பெரிய தருணம், வரலாற்றுத் தருணம், வரலாற்றுப் பாய்ச்சல் என உலக பத்திரிகைகளும், உலக நாடுகளும் பாராட்டி வருகின்றன.
இவ்வளவு பாராட்டுகளை பெறும் சந்திரயான் 3 வெற்றி பயணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
இந்தியாவின் முதல் நிலவு திட்டமான சந்திரயான் -1 2008ஆம் ஆண்டு ரூ.386 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டது. சந்திரயான் – 2 திட்டத்துக்கு ரூ.978 கோடி செலவிடப்பட்டது. ஆனால் இந்த இரண்டு திட்டங்களும் வெற்றியை தரவில்லை.
இந்நிலையில் ரூ.615 கோடி செலவில் சந்திரயான் 3 திட்டத்தை இஸ்ரோ தொடங்கி வெற்றியை கண்டிருக்கிறது.
2023 ஜூலை 6
ஜூலை 14, 2023 அன்று 14:35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து சந்திரயான் 3 ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது.
ஜூலை 11
சந்திராயன் 3 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான ஒத்திகையை மேற்கொண்டது இஸ்ரோ.
ஜூலை 13
விண்கலத்தை ஏவுவதற்கான கவுண்ட்டவுன் பிற்பகல் 1.05-க்கு தொடங்கியது.
ஜூலை 14
எல்விஎம்3 எம்4 ராக்கெட்டில் சந்திரயான் 3 விண்ணில் சீறிப்பாய்ந்து, நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது. புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
ஜூலை 15
சந்திரயான் 3 விண்கலத்தின் முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி பெங்களூரு இஸ்ரோ மையத்தில் இருந்து நிகழ்த்தப்பட்டது. அப்போது விண்கலம் 41762 கிமீ x 173 கிமீ சுற்றுப்பாதையில் இருந்தது.
ஜூலை 17
இரண்டாவது முறையாக சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி மேற்கொள்ளப்பட்டு 41603 கிமீ x 226 கிமீ நீள் வட்ட பாதையில் விண்கலம் செலுத்தப்பட்டது.
ஜூலை 18
மூன்றாவது முறையாக சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஜூலை 22
நான்காவது முறையாக சுற்றுப்பாதையை உயர்த்தும்பணி மேற்கொள்ளப்பட்டு 71351 கிமீ x 233 கிமீ சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது.
ஜூலை 25
இறுதியாக சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டது.
ஆகஸ்ட் 1
சந்திரயான்-3 பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விலகி உந்துவிசை மூலம் நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.
ஆகஸ்ட் 5
சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது. நிலவின் நீள்வட்ட பாதைக்குள் 164 கி.மீ x 18074 கி.மீ தொலைவில் இருந்தது.
ஆகஸ்ட் 6
சந்திரயான் 3 விண்கலத்தின் பாதை உயரம் குறைப்பு மேற்கொள்ளப்பட்டு, சந்திரனைச் சுற்றி 170 கிமீ x 4313 கிமீ சுற்றுப்பாதையில் இருந்தது.
ஆகஸ்ட் 9
சந்திரயான்-3 ன் சுற்றுப்பாதை 174 கிமீ x 1437 கிமீ ஆக குறைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 14
சுற்றுப்பாதை சுழற்சி கட்டத்தில் விண்கலம் 151 கிமீ x 179 கிமீ சுற்றுப்பாதையில் இருந்தது.
ஆகஸ்ட் 16
நிலவைச் சுற்றி 153 கி.மீ x163 கி.மீ நீள்வட்டப் பாதையில் சந்திரயான் 3 சுற்றும்படி உயரம் குறைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 17
உந்துகலனில் இருந்து விக்ரம் லேண்டா் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 19
லேண்டர் மாட்யூல் சந்திரனைச் சுற்றி 113 கிமீ x 157 கிமீ சுற்றுப்பாதையில் சுற்றுக்கொண்டிருந்தது.
ஆகஸ்ட் 20
நிலவின் மிக நெருக்கமான சுற்றுப் பாதையான 25 கி.மீ. x 134 கி.மீ. தொலைவில் விண்கலம் செலுத்தப்பட்டது.
ஆகஸ்ட் 21
சந்திரயான்-2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான்-3 ‘விக்ரம்’ லேண்டா் இடையே தகவல் தொடா்பு ஒருங்கிணைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 23
மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அங்கிருந்து, இந்தியா எனது இலக்கை அடைந்துவிட்டேன் என்ற மெசேஜை அனுப்பியது.
அதன்பின் Horizontal Velocity Camera மூலம் 4 புகைப்படங்களையும், Landing Imager camera மூலம் ஒரு புகைப்படத்தையும் அனுப்பியது. லேண்டரின் கால் நிழல் அதில் தென்பட்டது.
இதையடுத்து விக்ரம் லேண்டரின் மீது படிந்து இருந்த நிலவின் தூசு விலகியதை தொடர்ந்து பிரக்யான் ரோவர் அதில் இருந்து வெளியேற தொடங்கியது.
இந்த ரோவர் 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும். ரோவர் நிலவுக்கு தகவலை அனுப்ப அந்த தகவலை லேண்டர் இஸ்ரோ மையத்துக்கு அனுப்பும். இப்படியாக சந்திராயன் 3-ன் 40 நாட்கள் வெற்றிப்பயணம் அமைந்துள்ளது.
பிரியா
நிலவில் தரையிறங்கியது எங்கே?: புகைப்படம் அனுப்பிய லேண்டர்!
நிலவில் இருந்து லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம்!