‘சந்திரமுகி2’ படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருக்கும் நிலையில் படத்தின் கதாநாயகி குறித்தான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் ‘சந்திரமுகி’. இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. படம் வெளியாகி 16 வருடங்கள் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இந்த படத்தை இயக்க கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதல் பாகத்தில் ரஜினிகாந்த்- வடிவேலுவின் நகைச்சுவை மிகவும் ரசிக்கப்பட்டது.

அது போலவே, இந்த இரண்டாம் பாகத்திலும் நடிகர் வடிவேலு இணைகிறார். ராகவா லாரன்ஸ்- வடிவேலு நகைச்சுவை கூட்டணியின் எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த நிலையில், படத்தின் கதாநாயகி யார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. த்ரிஷா, சாய் பல்லவி என பல பெயர்கள் அடிபட்டது. ஆனால், சில காரணங்களால் த்ரிஷா நடிக்க முடியாமல் போக, சாய் பல்லவி கதையில் சொன்ன திருத்தம் காரணமாக அவருக்கான வாய்ப்பும் நழுவிப் போனதாக சொல்லப்பட்டது. அதனால், தற்போது லக்ஷ்மி மேனன் கதாநாயகியாக இறுதி செய்யப்பட்டுள்ளார்.
படப்பிடிப்பு இந்த மாதம் ஜூலை 15ம் தேதி மைசூரில் தொடங்க இருக்கிறது. 15ம் தேதியில் இருந்து தொடர்ந்து முப்பது நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. ’சந்திரமுகி2’ படத்திற்கு எம்.எம். கீரவாணி இசை அமைக்கிறார்.
ஆதிரா