கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வந்த ரஞ்சிக்கோப்பையின் நாயகன்!

Published On:

| By Minnambalam

ஐபிஎல் போட்டியில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில், இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த அணியின் உரிமையாளர்களாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் ஜூஹி சாவ்லா ஆகியோர் உள்ளனர்.

2022 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற 15வது ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி முதல் சுற்றோடு வெளியேறி இருந்தது. அதற்கு முந்தைய சீசனில் (2021) இரண்டாம் இடம்பிடித்திருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக மெக்குல்லம் நியமிக்கப்பட்டதையடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அவர் விலகினார்.

இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அந்த அணி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சந்திரகாந்த் பண்டிட், இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிக சக்சஸ் ரேட் கொண்டுள்ள பயிற்சியாளர் என அறியப்படுகிறார்.

இந்திய அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகளிலும், 36 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள பண்டிட், ரஞ்சி கோப்பைப் போட்டியில் மும்பை, மத்தியப் பிரதேச அணிகளுக்காக விளையாடியுள்ளார்

chandrakant pandit

ரஞ்சிக்கோப்பையின் நாயகன்!

2022 ஜூன் மாதம் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மத்தியப் பிரதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வென்று, போட்டியின் 87 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் ஆனது.

41 முறை ரஞ்சி சாம்பியனான மும்பையை வீழ்த்தி வெற்றிக் கோப்பையை மத்தியப் பிரதேச அணி வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் இந்த சந்திரகாந்த் பண்டிட் என்பது கூடுதல் தகவல்.

இதற்கு முன்னர், இவருடைய பயிற்சியின்கீழ் விளையாடிய மும்பை அணி 3 முறையும், விதர்பா அணி 2 முறையும் ரஞ்சிக்கோப்பையை வென்றிருக்கிறது.

இதனால், அவர் ரஞ்சிக்கோப்பை நாயகன் எனப் போற்றப்படுகிறார். இதைக் குறிவைத்துத்தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இவரை பயிற்சியாளராக நியமித்திருக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் புதிய பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் கூட்டணியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என அவ்வணியின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கி மைசூர் கூறியிருக்கும் நிலையில், சந்திரகாந்த் பண்டிட்டும், கொல்கத்தா அணியுடனான இந்த வாய்ப்பை தாம் ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தன்னால் எந்தவொரு வெளிநாட்டு பயிற்சியாளருக்கு கீழும் பணியாற்ற முடியாது எனவும், அதனால்தான் தன்னால் ஐபிஎல் கிரிக்கெட்டில் பணி செய்ய முடியவில்லை எனவும் 2022 ஜூன் மாதம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ்!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share