ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு ஜூன் 9ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
ஆந்திராவின் 175 சட்டப்பேரவை தொகுதிக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
அங்கு ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பாஜக- சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி- பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி போட்டியிட்டது.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் 33 இடங்களில் 401 மையங்களில் இன்று (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
அதன்படி ஆந்திரா சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை பாஜக-தெலுங்குதேசம்-ஜனசேனா கட்சி கூட்டணி முன்னிலையில் உள்ளது.
பவன் கல்யாண் தலையிலான ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும் போட்டியிட்டன. இதில் தெலுங்கு தேசம் கட்சி 124 இடங்களில் வெல்வது உறுதியாகியுள்ளது. 175 சட்டமன்றத் தொகுதிகளில் 13 இடங்களில் மட்டுமே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இன்று மாலை 4 மணிக்கு தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார்.
அதேவேளையில் ஆந்திர மாநில முதல்வராக 4வது முறையாக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு ஜூன் 9ஆம் தேதி முதல்வராக அவர் பதவியேற்பார் என கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா அமராவதியில் நடைபெற உள்ளது.
மோடி வாழ்த்து:
ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றப்போகும் சந்திரபாபு நாயுடுவிற்கு, மோடி தொலைபேசி மூலமாக அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடுவிடம் பேசிய டி.கே.சிவக்குமார்
கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளதால், அவர்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்குமாறு சிவக்குமார் கூறியுள்ளார்.
இந்தியா கூட்டணியில் சந்திரபாபு நாயுடு இணைந்தால் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என உறுதியளித்ததாக தெரிகிறது. தெலுங்கு தேசம் கட்சி இந்தியா கூட்டணியை ஆதரித்தால் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இந்தியா கூட்டணியை ஆதரிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சந்திரபாபு நாயுடு இந்தியா கூட்டணியில் இணைந்தால், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…