சிறையில் சந்திரபாபு… மாநிலம் முழுவதும் பந்த்… ஆந்திராவில் பதற்றம்!

Published On:

| By christopher

சந்திரபாபு நாயுடு கைது மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட நடவடிக்கையை கண்டித்து ஆந்திரா முழுவதும் முழு அடைப்புக்கு தெலுங்கு தேசம் கட்சி இன்று (செப்டம்பர் 11) அழைப்பு விடுத்துள்ளது.

ஆந்திரா மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, கடந்த 8ஆம் தேதி இரவு நந்தியாலா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு இரவில் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அருகே கேரவனை நிறுத்தி அதிலேயே உறங்கினார்.

ADVERTISEMENT

அடுத்த நாள் 9ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் சந்திரபாபுவை கைது செய்ய டி.ஐ.ஜி. ரகுராம ரெட்டி மற்றும் நந்தியாலா எஸ்பி. ரகுவீரா ரெட்டி தலைமையில் சுமார் 600-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதிக்கு வந்தனர்.

ADVERTISEMENT

அப்போது அங்கிருந்த தெலுங்கு தேசம் கட்சியினருக்கும்,  போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து 3 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் 6.30 மணியளவில் திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஏ1 குற்றவாளியாக இருக்கும் சந்திரபாபு நாயுடுவை மாநில குற்ற புலனாய்வு துறை (சி.ஐ.டி) போலீசார் கைது செய்தனர்.

ADVERTISEMENT

நந்தியாலம் பகுதியில் இருந்து அமராவதிக்கு பலத்த பாதுகாப்புடன் போலீசார் தொடர்ந்து 8 மணி நேரம்  காரிலேயே அழைத்து சென்றனர்.

வழி நெடுகிலும் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மாநிலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாதவாறு, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த பெரிய புள்ளிகள் பலரையும் ஹவுஸ் அரெஸ்ட் செய்தனர் ஆந்திர போலீசார்.

மாலையில் விஜயவாடாவில் உள்ள சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சந்திரபாபு நாயுடுவிடம் ஊழல் வழக்கு தொடர்பாக விடிய விடிய விசாரணை நடத்தினர்.

அதை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு நேற்று காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நேற்று நெல்லூர் மாவட்டம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வழக்கு தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி மாநில குற்ற புலனாய்வு துறை தரப்பில் முறையிடப்பட்டது. அதே நேரத்தில் சந்திரபாபு நாயுடு தரப்பிலும் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையில், ஜாமின் மனுவை ஏற்க மறுத்து, சந்திரபாபு நாயுடுவுக்கு வரும் 22ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி அவர் தற்போது ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலத்தில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக மற்றும் பவன் கல்யானின் ஜனசேனா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளன.

எனினும் முழு அடைப்பு அறிவிப்பு காரணமாக ஏற்படும் அசாம்பாவிதங்களை தடுத்து ஆந்திரா முழுவதும் 144 தடை உத்தரவை அம்மாநில அரசு பிறப்பித்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

சனாதனமும், பாரதமும்: ஆரிய மாயையின் வரலாற்று வடிவங்கள்!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share