சண்டிகர் மேயர் தேர்தல் – பாஜக வெற்றி செல்லாது : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published On:

| By Kavi

Chandigarh mayoral victory is invalid

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றியை ரத்து செய்து ஆம் ஆத்மி வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 20) அறிவித்தது.

கடந்த ஜனவரி 30ஆம் தேதி சண்டிகர் மேயர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ்- ஆம் ஆத்மி இணைந்து போட்டியிட்டன. பாஜக தனித்து போட்டியிட்டது.

இந்தியா கூட்டணி அமைந்த பின்னர் நடந்த முதல் தேர்தல் இது என்பதால் சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை நாடே உற்றுக் கவனித்தது.

இந்த தேர்தலில் காங்கிரஸ்-ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அனில் மஸ்ஹி அறிவித்தார்.

இதையடுத்து ஆம் ஆத்மி தரப்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் தேர்தல் அதிகாரி வாக்குச்சீட்டுகளை திருத்துவது பதிவாகியிருந்தது.

இதுதொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “தேர்தல் அதிகாரி வாக்குச்சீட்டை திருத்துவது தெளிவாக தெரிகிறது. இத்தகைய செயலால் ஜனநாயகம் கேலிகூத்தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருக்கிறது” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், சண்டிகர் மேயர் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, தேர்தல் அதிகாரி ஆஜரானார்.

அவரிடம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “நாங்கள் அந்த வீடியோவைப் பார்த்தோம். வாக்குச்சீட்டுகளில் எக்ஸ்(x) குறியீட்டை போட்டு என்ன செய்தீர்கள்” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு தேர்தல் அதிகாரி, “செல்லும் வாக்கு, செல்லாத வாக்கு என தனி தனியாக பிரிப்பதற்காக, அதனை அடையாளம் காணுவதற்காக அப்படி செய்தேன். 8 வாக்குச்சீட்டுகளில் குறியீடு செய்தேன். ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் வாக்குச்சீட்டுகளைப் பறிக்க முயன்றார்கள். வாக்குச்சீட்டுகள் சேதப்படுத்தப்பட்டது” என்று பதிலளித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி, “அனில் மஸ்ஹி 8 வாக்குச்சீட்டுகளில் மட்டுமே குறியிட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதை நீதிமன்றம் பதிவுசெய்து கொள்கிறது. வாக்குச்சீட்டுகள் மற்றும் வீடியோக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றை பஞ்சாப் சண்டிகர் உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

வாக்குப்பதிவு தொடர்பான மனுவை வேறுநாளில் விசாரிக்க வேண்டும் என்ற மனுவை ஏற்க முடியாது என்று தெரிவித்த தலைமை நீதிபதி, “புதிதாக தேர்தல் நடத்தாமல், ஏற்கெனவே பதிவான வாக்குகளின் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்” என்று கூறினார்.

இந்த வழக்கு மீண்டும் இன்று (பிப்ரவரி 20) தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையின் போது தேர்தல் அதிகாரி வாக்குச்சீட்டுகளை திருத்துவது தொடர்பான வீடியோ போட்டு காண்பிக்கப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி, “எல்லோரும் இந்த வீடியோவை பாருங்கள். சிறிது பொழுதுபோக்கு அனைவருக்கும் நல்லதுதான்” என தலைமை நீதிபதி குறிப்பிட்டதால் சிரிப்பலை ஏற்பட்டது.

தொடர்ந்து, “செல்லாதது என அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளையும் செல்லத்தக்கதாக கருத்தில் கொண்டு மீண்டும் அனைத்து வாக்குகளையும் எண்ணும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி, நீதிபதிகள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு, ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் குல்தீப் குமார் சண்டிகர் மாநகராட்சி மேயர் என சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் சோன்கர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்த முடிவு சட்டவிரோதமானது என தெரிவித்த நீதிபதிகள், “குல்தீப் குமாருக்கு ஆதரவாக போடப்பட்ட 8 வாக்குகளை செல்லாததாக மாற்றும் வகையில் தேர்தல் அதிகாரி அவற்றை வேண்டுமென்றே இவ்வாறு செய்துள்ளார்.. இந்த 8 வாக்குகளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக இருக்கிறது என்பதை நீதிமன்றம் கண்டறிந்துள்ளது” என தெரிவித்தனர்.

தொடர்ந்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தேர்தல் அதிகாரி அனில் மஸ்ஹியை பார்த்து, ‘சேதப்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டு என்பதால் பேனாவை வைத்து குறியிட்டதாக நேற்று நீதிமன்றத்தில் கூறினீர்கள். இங்கே பாருங்கள்… எங்கே இந்த வாக்குச் சீட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு தேர்தல் அதிகாரி எந்த பதிலும் சொல்லவில்லை.

அதேசமயம், “எந்த வாக்குச்சீட்டுகளும் செல்லாதவை அல்ல. அனில் மஸிஹ் நீதிமன்றத்திலேயே பொய் கூறியுள்ளார். அவர் குற்றவாளி. அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆம் ஆத்மி தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “வாக்குசீட்டுகள் எங்கும் சேதப்படுத்தப்படவில்லை. வாக்குச்சீட்டில் முறைகேடு செய்து பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்த தேர்தல் அதிகாரி அனில் மஸ்ஹி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

குற்றப்பிரிவு 340ன் (அரசு ஊழியர்களின் சட்டப்பூர்வ அதிகாரத்தை அவமதித்ததற்காக) கீழ் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது.

நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்ததற்காக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் அவர் மீது எடுக்க வேண்டும். அவருக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பி, இதுதொடர்பாக 3 வாரங்களில் அவர் பதிலளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

“தேர்தல் ஜனநாயகம் நசுக்கப்படுவதை தடுக்க உச்ச நீதிமன்றத்தின் உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்துகிறோம். அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் நீதிமன்றம் அதன் அதிகாரங்களை பயன்படுத்தியுள்ளது” என்று தெரிவித்து ஆம் ஆத்மி வேட்பாளரான குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

வருஷம் 16 : தோனிக்காக ‘சண்டை’ செய்த மும்பை… வீடியோ உள்ளே!

ஐந்து மாநிலங்களில் போட்டி: டெல்லியில் திருமாவளவன் பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share