Chandigarh Election Democratic Massacre
சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில் நடந்த மேயர் தேர்தலில், ஆம் ஆத்மி காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டன. அதேபோல பாஜகவும் வேட்பாளரை நிறுத்தியது.
மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்த நிலையில் பாஜக 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி 12 வாக்குகள் பெற்று தோல்வியடைந்ததாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் தேர்தல் அதிகாரி அணில் மாஷி வாக்குச்சீட்டில் ஏதோ மாற்றம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் பாஜக வெற்றிக்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுத்ததால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திர சூட் மற்றும் நீதிபதிகள் ஜெ.பி.பரிதிபாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா அமர்வில் இன்று (பிப்ரவரி 5) விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி, ‘தேர்தல் அதிகாரி வாக்கு சீட்டுகளை சிதைத்துள்ளார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அவர் மீது வழக்கு தொடர வேண்டும். ஒரு தேர்தல் அதிகாரி செயல்படும் விதம் இதுதானா.
இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது மட்டுமின்றி ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு சமம். அந்த தேர்தல் அதிகாரியிடம் சொல்லுங்கள் அவரை உச்சநீதிமன்றம் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.
மாநகராட்சி தேர்தலின்போது பதிவான முழு பதிவுகளையும் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். மேயர் தேர்தலின் போது பதிவான வாக்கு சீட்டுகளும் வீடியோக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். இன்று மாலை ஐந்து மணிக்கு இதை ஒப்படைக்க வேண்டும்.
வரும் பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெறவிருக்கும் சண்டிகர் மாநகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த வழக்கு 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
அன்றைய தினம் தேர்தல் அதிகாரி அணில் மாஷி ஆஜராகி அவரது நடத்தைகள் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த விசாரணையின் போது தேர்தல் அதிகாரி கேமராவை பார்த்துக் கொண்டு ஒரு திருடனை போல் செயல்பட்டார் என்றும் காட்டமாக தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜக 370 இடங்களில் வெல்லும் : மோடி உறுதி!
Video: ”நீ விதைத்த வினை எல்லாம்” கேப்டனை பழி வாங்கிய இளம்வீரர்
Chandigarh Election Democratic Massacre