தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “நேற்று (28-10-2025) காலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “மோன்தா” தீவிரப்புயல் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திரா – யானம் கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம் கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு தெற்கே, நரசாபூருக்கு அருகில், நேற்று நள்ளிரவு 23.30 மணி அளவில் கரையை கடந்து, இன்று (29-10-2025) அதிகாலை 02.30 மணி அளவில், புயலாக வலுக்குறைந்து, இன்று காலை 08.30 மணி அளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுக்குறைந்து, ஆந்திர பகுதிகளில் நிலவுகிறது.
இது, மேலும் வடக்கு- வடமேக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுக்குறையக்கூடும்.
நேற்று (28-10-2025) மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த
தாழ்வு மண்டலம், இன்று (29-10-2025) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 36 மணி நேரத்தில் மேலும், வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும்.
29-10-2025 மற்றும் 30-10-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
31-10-2025 முதல் 04-11-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (அக்டோபர் 29) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (30-10-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
