ADVERTISEMENT

நூற்றாண்டு காயங்கள் குணமடைந்துள்ளன : காவி கொடியை ஏற்றி வைத்து மோடி பேச்சு!

Published On:

| By Kavi

அயோத்தியில் ஏற்றப்பட்டிருப்பது வெறும் கொடியல்ல, அது நாகரிகத்தின் மறுமலர்ச்சி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் முடிந்தும் முடியாமலும் பிராண பிரதிஷ்டை விழா நடத்தப்பட்டது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று ராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். 

ADVERTISEMENT

இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமான பணி நிறைவடைந்திருக்கும் நிலையில் காவி கொடியை இன்று (நவம்பர் 25) ஏற்றினார் பிரதமர் மோடி. கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததைக் குறிக்கும் விதமாக இக்கொடி ஏற்றப்பட்டது.

161 அடி உயரமுள்ள கோபுரத்தில் ஏற்றப்பட்ட இந்த காவிக் கொடி 22 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்டது. அதில் சூரியன், ‘ஓம்’ மற்றும் கோவிதார மரத்தின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

கொடியை ஏற்றி வைத்து பக்தர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “உலகமும், முழு இந்தியாவும் இப்போது ராம மயமாகியுள்ளது. கொடி ஏற்றியதன் மூலம் இதயத்தில் மகிழ்ச்சி திருப்தி ஏற்பட்டுள்ளது.

நூற்றாண்டு காயங்கள் குணமடைந்துள்ளன. பல நூற்றாண்டுகளின் சத்தியம் நிறைவேறி இருக்கிறது. 500 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருந்த அந்த தியாகத்தின் நிறைவு நாள்.

ADVERTISEMENT

ஒவ்வொரு குடிமகனும் கடமை, ஒற்றுமை, மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் இலட்சியங்களுக்காக உழைத்து, 2047 ஆம் ஆண்டுக்குள் ‘விக்சித் பாரதம்’ (வளர்ந்த இந்தியா) என்ற இலக்கை அடைய பாடுபட வேண்டும்.

கோயிலுக்கு வந்து நேரில் வணங்க முடியாதவர்கள், தொலைதூரத்தில் இருந்து கோயில் கொடியை வணங்கினாலே, நேரில் வணங்கியவர்களுக்கு கிடைக்கும் அதே புண்ணியம் கிடைக்கும் என்று வேதங்கள் கூறுகின்றன” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share