மத்திய அரசின் பதவி பறிப்பு சட்டம்- ‘பாரத் பந்த்’ போராட்டம்- ஸ்டாலினுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

Published On:

| By Mathi

Bandh VCK DMK

மத்திய அரசின், முதல்வர்கள்- அமைச்சர்கள் பதவி பறிப்பு சட்ட மசோதாவை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து அறப்போராட்டங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும்; குறிப்பாக, பிறமாநிலங்களும் வெகுண்டெழும் வகையில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்திட வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:நாடாளுமன்ற மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் மூன்று சட்ட மசோதாக்களைத் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற விதிகளுக்கு மாறாக கூட்டத் தொடர் முடிவதற்கு முதல் நாள் திடுமென இவை அறிமுகம் செய்யப்பட்டன. இந்த சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சட்டமானால் நாடாளுமன்ற ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படும். இது அரசமைப்புச் சட்டத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் அப்பட்டமான ஃபாசிசத் தாக்குதலாகும். இம்முயற்சியை உடனடியாக முறியடித்திட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறைகூவல் விடுக்கிறது.

அரசமைப்புச் சட்ட (130வது திருத்தம்) மசோதா-2025; யூனியன் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா-2025; மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா -2025 ஆகிய மூன்று மசோதாக்கள்தாம் மக்களவையில் இன்று அமித்ஷா அவர்களால் தாக்கல் செய்யப்பட்டன.

அரசமைப்புச் சட்ட (130வது திருத்தம்) மசோதா அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண்-75 ஐத் திருத்த முயல்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், 30 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் காவலில் இருந்தாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ, அவருக்குத் தண்டனை விதிக்கப்படாவிட்டாலும் கூட, அவரைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்குகிறது. மற்ற இரண்டு மசோதாக்களும் அதே அதிகாரத்தை யூனியன் பிரதேசங்களிலும், ஜம்மு காஷ்மீரிலும் செயல்படுத்துபவை ஆகும்.

அறிமுக நிலையிலேயே எழுந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக இவை மூன்றையும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு (JPC) அனுப்புவது என்கிற நெருக்கடிக்கு உள்ளானது ஒன்றிய அரசு அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா-2025, அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண்-21 இல் உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமையை மீறுகிறது. அத்துடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைப் பதவியிலிருந்து நீக்குவதற்குரிய அதிகாரத்தை ஆளுநருக்கு அனுமதிப்பதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்றான நாடாளுமன்ற ஜனநாயகத்தையே முற்றாக சிதைக்கிறது.

ஏற்கனவே அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண்-356 ஐப் பயன்படுத்தி தனக்குப் பிடிக்காத மாநில அரசுகளை ஒன்றிய ஆட்சியாளர்கள் அடிக்கடி கலைத்து வந்தனர். அதைத் தடுக்கும் வகையில் 1994 ஆம் ஆண்டு எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் கடுமையான சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் பின்னர்தான் உறுப்பு எண்- 356 ஐத் தவறாகப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைப்பது கட்டுப்படுத்தப்பட்டது. இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இச்சட்டங்கள் முன்பிருந்ததைவிட மோசமான நிலைக்கு நாட்டைத் தள்ளுவதற்கான சதிமுயற்சியாகும்.

உதவி ஆய்வாளர் நிலையில் பணிபுரியும் காவல்துறை அதிகாரி ஒருவர் நினைத்தாலே போதும் ஒரு முதலமைச்சரையே பதவியிலிருந்து தூக்கிவிட இந்த சட்டம் வழிவகுக்கிறது. ஏற்கனவே அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ முதலானவற்றை பாஜக அரசு அரசியல் பழிவாங்கலுக்காகப் பயன்படுத்துகிறது. அண்மையில் இதை உச்சநீதிமன்றமே குறிப்பிட்டுக் கண்டித்துள்ளது.

இந்தச் சூழலில் அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் நினைத்தால் முதலமைச்சரையே மாற்றலாம் என்கிற அளவற்ற அதிகாரத்தைக் கொடுப்பது பேராபத்தாகவே முடியும். மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்தச் சட்ட மசோதாக்கள் சட்டரீதியான வழியைப் பயன்படுத்தி அரசமைப்புச் சட்டத்தை அழித்தொழிப்பதற்கான ஏற்பாடாகும். இந்த அப்பட்டமான ஃபாசிசத் தாக்குதலை முறியடிக்கும் அறப்போரில் தமிழ்நாடு தலைமை வகிப்பதே பொருத்தமாகும்.

ADVERTISEMENT

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த சட்ட மசோதாக்களை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து அறப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்; குறிப்பாக, பிறமாநிலங்களும் வெகுண்டெழும் வகையில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share