தமிழ்நாட்டிற்கு, 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதியை விடுவிக்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. centre stops MGNREGA fund why
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGA) ஆகஸ்ட் 23, 2005 அன்று நிறைவேற்றப்பட்டு, 2006 பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது. வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அட்டை வழங்கப்படும். அதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தது நூறு நாட்களுக்கு உத்தரவாதமான ஊதிய வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
இந்த திட்டத்துக்கு 2006-07-ம் நிதியாண்டு முதல் 2013-14-ம் நிதியாண்டு வரை உருவாக்கப்பட்ட மொத்த மனித வேலை நாட்கள் 1660 கோடியாக இருந்தது. 2014-15-ம் நிதியாண்டு முதல் 2024-25-ம் நிதியாண்டு வரை மொத்த மனித வேலை நாட்கள் 2923 கோடியாக உள்ளது.
இந்த வேலைக்கு ஒரு நாள் கூலியாக ரூ.50 ல் தொடங்கி தற்போது ரூ.374 வரை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றவாறு இந்த தொகை மாறுபடும் நிலையில் தமிழ்நாட்டில் ஒருவருக்கு தற்போது ரூ.319 ஊதியமாக வழங்கப்படுகிறது. அப்படியானால் ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.31,900 ஊதியமாக கிடைக்க வழிவகுக்கிறது.
தமிழ்நாட்டில் 85 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 1.09 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். 86% வேலைவாய்ப்பு பெண் தொழிலாளர்களுக்கும், மொத்த வேலைவாய்ப்புகளில் 29% ஆதி திராவிட மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கும் வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் 100 நாள் வேலைக்கான ஊதியம் முழுவதுமாக கிடைப்பதில்லை. காரணம், 10 பேர் கொண்ட குழு ஓரிடத்தில் வேலை செய்கிறது என்றால், ஒரு ஆளுக்கு 1 அடி ஆழம் , 3 அடி அகலம், 5 அடி நீளத்துக்கு பள்ளம் தோண்டி, மண்ணை அகற்ற வேண்டும் என வேலை கொடுக்கப்படும். ஆனால் அவர் இந்த வேலையை முழுமையாக செய்யாத காரணத்தால், செய்த வேலைக்கு ஏற்ப 150 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை முடிவு செய்து மாத இறுதியில் வங்கிக் கணத்தில் பணத்தை செலுத்திவிடுவார்கள்.
இப்படிதான் 100 நாள் வேலை திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
அதே சமயம் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல், இது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதாலும், இந்த திட்டத்தால் விவசாய வேலைகள் முழுமையாக பாதிக்கப்படுகிறது என்று கூறியும் இத்திட்டத்துக்கு அதிக கவனம் கொடுக்கப்படுவதில்லை.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் நிதியில் இருந்து ஒவ்வொரு ஊராட்சியில் 40 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரையில் பால்வாடி கட்டுவது, பள்ளி கட்டிடம் கட்டுவது, கிராமப்புற சாலை அமைப்பதற்கு பொருட்களை வாங்க மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. இது பொருட் கூறுக்கான நிதி எனப்படுகிறது.
இதனால் நூறு நாள் வேலை நாட்களும் ஊதியமும் மேலும் குறைகிறது.
இப்போது தமிழ்நாட்டுக்கு 2024 நவம்பர் முதல் 2025 வரையில் 100 நாள் வேலை திட்டத்துக்காக வழங்க வேண்டிய நிதியான சுமார் 3500 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால் ஊதியம் கிடைக்காமல் ஆங்காங்கே மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதைப்பற்றி தமிழக நிதித்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது,
“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மீது மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை. படிபடியாக நிறுத்தி வருகிறது. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை கூட மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் உட்பட 12 மாநிலங்களுக்கு நிதியை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இருந்தாலும் தமிழக அரசு நிதியை கேட்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தி வருகிறது” என்கிறார்கள்.
ஏற்கனவே 100 நாள் வேலை திட்ட நிதியை விடுவிக்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதினார். தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி ஆகியோர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது. centre stops MGNREGA fund why