மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை சஸ்பெண்ட் செய்துவிட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக மேற்கு வங்க அரசிடம் இருந்து மாநில அரசின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி யை பாஜகவால் அசைக்க முடியவில்லை. மேற்கு வங்க ஆளுநராக இருந்த சிவி ஆனந்த போஸ் தொடக்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜியுடன் முரண்பட்டிருந்தார். பாஜக ஆட்சியில் இல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மோதல் போக்கை கடைபிடிப்பதைப் போல சிவி ஆனந்த போஸும் செயல்பட்டு வந்தார். இதனை மமதா பானர்ஜி கடுமையாக எதிர்த்தார்.
தற்போது மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி ஆட்சியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதை பாஜக விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது. இதனால் மாநில அரசின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து நெகட்டிவ் அறிக்கையை ஆளுநராக இருந்த சிவி ஆனந்த போஸிடம் கேட்டது மத்திய அரசு என்கின்றன ஊடகங்கள்.
ஆனால் அண்மை காலமாக முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடித்த ஆளுநர் சிவி ஆனந்த போஸ், மத்திய அரசின் இந்த முயற்சியை ஏற்கவில்லை. இந்நிலையில்தான் திடீரென சிவி ஆனந்த போஸ் தமது பதவியை ராஜினாமா செய்தார் எனவும் சொல்லப்படுகிறது.
சிவி ஆனந்த போஸ் ராஜினாமா செய்தது குறித்து கருத்து தெரிவித்த மமதா பானர்ஜி, மத்திய அரசின் நெருக்கடியால்தான் அவர் பதவி விலகினார் எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இதனிடையே மாநில அரசுகள் நிர்வாகத்தில் தலையிட்டு அதிகமான சர்ச்சைகளில் சிக்கி, நீதிமன்றத்தில் குட்டுப்பட்ட தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். மாநிலத்தின் ஆளுநரை நியமிக்கும் முன் மத்திய அரசு தம்மிடம் ஆலோசனை நடத்தவில்லை என மமதா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்த பரபரப்புகளுக்கு இடையே நேற்று மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெற்ற சந்தால் பழங்குடிகள் மாநாட்டில் பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார். நாட்டின் ஜனாதிபதி பதவியில் இருப்பவர் ஒரு மாநிலத்தின் முதல்வரை விமர்சித்தது அசாதாரண நிகழ்வாகப் பார்க்கப்பட்டது.
மேலும் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மமதா பானர்ஜி வரவேற்காதது, அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் இடங்களை மாற்றியது ஆகியவற்றுக்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இப்பின்னணியில் தற்போது, மேற்கு வங்க மாநில சட்டம் ஒழுங்கு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மமதா பானர்ஜி அரசு சஸ்பெண்ட் செய்யப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டால் சட்டப்பேரவைத் தேர்தல் ஒத்திவைக்கப்படும். குறைந்தபட்சம் 6 மாதங்களுக்குப் பின்னரே மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.
