நாளை முதல் நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறுமா? : மத்திய அமைச்சர் பதில்!

Published On:

| By Minnambalam Login1

centre opposition agree

மத்தியில் ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே இன்று ( டிசம்பர் 2) நடந்த சந்திப்பில், நாளை முதல் நாடாளுமன்றம் வழக்கம் போல் நடைபெறும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் திங்கட்கிழமை (நவம்பர் 25) தொடங்கியது. ஆனால் முதல் வாரம் முழுவதும் நாடாளுமன்றம் நடைபெறவில்லை.

இதற்கு காரணம், குளிர்காலக் கூட்டத்தின் முதல் அமர்வில் இருந்தே, எதிர்க்கட்சிகள் அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட அதானி குழுமம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்கான தீர்மானங்களை முன் வைத்தன.

ஆனால் அவை எதுவும் மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்களால் ஏற்கப்படவில்லை. இதனால் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால், கடந்த வாரம் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இன்றும் (டிசம்பர் 2) அதே நிலைமை தொடர்ந்தால், இரண்டு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மத்திய பாஜக அரசும் எதிர்க்கட்சிகளும் இன்று சந்தித்து, நாடாளுமன்ற அமர்வை பிரச்சினை இல்லாமல் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்புக்கு பிறகு பத்திரிகையார்களை சந்தித்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில் “நாளை (டிசம்பர் 3) முதல் நாடாளுமன்ற சுமுகமாக நடைபெறும்.” என்றார்.

அரசியலமைப்பை ஏற்று 75 ஆண்டுகள் ஆகிறது. இது தொடர்பாக “டிசம்பர் 13,14 ஆகிய இரு தினங்களில் மக்களவையிலும், டிசம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் மாநிலங்களவையிலும் அரசியலமைப்பு குறித்து விவாதிக்கப்படும்” என்று கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

ஆனால் இந்த சந்திப்பில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சில எதிர்க்கட்சிகள் அதானி போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.

மாறாக விலைவாசி உயர்வு, வேலையின்மை, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளாத மாநிலங்களுக்கு சரியான நிதி ஒதுக்காத மத்திய அரசு குறித்துத்தான் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் விவாதிக்க ஆவலுடன் இருந்தனர்.

அதனால் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு இடையே நடந்த சந்திப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

ஆறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

விழுப்புரத்தில் வெள்ளம் : சென்னை – திருச்சி நெடுஞ்சாலை துண்டிப்பு!

‘ஃபெஞ்சல்’ பாதிப்பு குறித்து விவாதிக்க மறுப்பு… மக்களவை ஒத்திவைப்பு!

நிர்மலா சீதாராமனை சந்தித்த தங்கம் தென்னரசு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share