ராகுல் காந்தியின் குரலை நசுக்கும் மத்திய அரசு: மல்லிகார்ஜூன கார்கே

Published On:

| By christopher

உண்மையை பேசும் ராகுல் காந்தியின் குரலை நசுக்க மத்திய அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து பேசியதற்காக அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது.

4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து எம்.பி.பதவியில் இருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் இன்று அறிவித்துள்ளது.

இதற்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், “ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய பாஜக அனைத்து வழிகளையும் மேற்கொண்டது. உண்மையை பேசுபவர்களை பாஜக அரசு ஒருபோதும் விரும்புவதில்லை.

அந்த வகையில் தான் ராகுல் காந்தியின் குரலை நசுக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. எனினும் அதானி விவகாரத்தில் காங்கிரஸ் தொடர்ந்து உண்மையையே பேசும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share