மாமன் படம் வெற்றி பெற வேண்டி மண்சோறு சாப்பிட்ட ரசிகர்களை நடிகர் சூரி வெளிப்படையாக கண்டித்தது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றுள்ளது. celebreties prasied soori for his angry on mansoru
நடிகர் சூரி – ஐஸ்வர்யா லெட்சுமி ஆகியோரது நடிப்பில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவான மாமன் திரைப்படம் நேற்று (மே 16) உலகம் முழுவதும் ரிலீசானது. படத்தின் முதல் காட்சி முதலே பாசிட்டிவான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இதற்கிடையே மாமன் படம் வெற்றி பெற வேண்டி சூரியின் சொந்த ஊரான மதுரையைச் சேர்ந்த ரசிகர்கள் சிலர் மண் சோறு சாப்பிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

இதுதொடர்பாக நேற்று பேட்டியளித்த நடிகர் சூரி, மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள் குறித்து வேதனைப்பட்டார்.
அவர் கூறுகையில், “மாமன் படம் வெற்றியடைய வேண்டும் என்று சொல்லி மதுரையில் மண் சோறு சாப்பிட்டுள்ளார்கள். அவர்களை அன்பு தம்பிகள் என்று சொல்வதற்கே வருத்தமாக உள்ளது.
இது ரொம்ப முட்டாள் தனமானது தம்பிகளா.. படமும், கதையும் நன்றாக இருந்தால் அந்த படம் வெற்றி அடையும். அதை விட்டு விட்டு மண் சோறு சாப்பிட்டால், படம் எப்படியிருந்தாலும் ஓடிடுமா என்ன?
இது போன்ற செயல்களை செய்பவர்கள் என்னுடைய தம்பிகளாக ரசிகர்களாக இருப்பதற்கு தகுதி அற்றவர்கள். நான் சாப்பாடு கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வந்துருக்கேன். அப்படி இருக்கும்போது அதை மதிக்காமல் நீங்கள் இப்படி செய்தது ரொம்ப முட்டாள்தனமானது” என தனது ஆதங்கத்தை வெளிப்படையாக பேசினார் நடிகர் சூரி.
இதனையடுத்து அவரை திரையுலக, அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாடலாசிரியர் வைரமுத்து
திரைக்கலைஞர் தம்பி சூரியைப் பாராட்டுகிறேன். தனது திரைப்பட வெற்றிக்காக மண்சோறு தின்ற ரசிகர்களைப் பகிரங்கமாகச் சாடியிருக்கிறார்.
மண்ணிலிருந்து தானியம் வரும்; தானியம் சோறாகும். ஆனால், மண்ணே சோறாக முடியாது. இந்த அடிப்படைப் பகுத்தறிவு இல்லாதவர்கள் தன் ரசிகர்களாக இருக்கமுடியாது என்று சொல்வதற்குத் துணிச்சல் வேண்டும்.
கதாநாயகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ரசிகர் கூட்டத்தை இப்படி நெறிப்படுத்தி வைத்திருந்தால் கலையும் கலாசாரமும் மேலும் மேலும் மேம்பட்டிருக்கும். மண்சோறு தின்றால் ஓடாது மக்களுக்குப் பிடித்தால் மாமன் ஓடும் என பகுத்தறிவு காத்திருக்கும் சூரியை ‘பலே பாண்டியா’ என்று பாராட்டுகிறேன்.
திவிக பெரியார் அமைப்பு
நடிகர் சூரி அவர்களுக்கு பாராட்டுகள் !
கட் அவுட் மேல் ஏறி நின்று பால் அபிஷேகம் செய்ததால் உயிரிழந்த ரசிகர்கள் உண்டு.ரஜினி கமல் விஜய் அஜித் என எந்த நடிகர்களுடைய ரசிகர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. மேலும் மண் சோறு சாப்பிடுதல் தங்கத்தேர் இழுத்தல் போன்ற மூடநம்பிக்கை செயல்களை முன்னணி திரைப்பட நடிகர்களின் ரசிகர்கள் செய்கிறார்கள்.
இப்படியான மூடநம்பிக்கை செய்யும் ரசிகர்களை அந்த முன்னணி நடிகர்கள் யாரும் இப்படி கண்டித்ததாக இதுவரை நாம் பார்த்ததில்லை. காரணம் சுயநலம். தன்னுடைய ரசிகர்களை கண்டித்தால் அவர்களை இழக்க நேரிடும் எனும் அச்சம் காரணம். ஆனால் இதையெல்லாம் பற்றி அச்சப்படாமல் துணிச்சலாக தன்னுடைய ரசிகர் செய்யும் தவறை கண்டித்து அவர்களை நல்வழிப்படுத்தும் நல்ல நோக்கத்தோடு பேசி இருக்கும் சூரியை மனமாற பாராட்டத்தான் வேண்டும்.
நாளை சூரிக்கு எதிராக எங்கள் மனதை புண்படுத்தி விட்டார்கள் என்று சங்கிகளின் கூட்டம் கிளம்பும். அப்போது சூரிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். “படம் நன்றாக இருந்தால் ஓடும். மண் சோறு சாப்பிட்டால் ஓடுமா ?” என்பது மிக சுருக்கமான பகுத்தறிவு கேள்வி!
மோசஸ்ராஜ்
சூரி எனும் சுடர்வீரன்! ✨
வெற்றிக்கு மண்ணுண்ட கூட்டத்தைக் கடிந்தான்!
மண்ணில் பிறக்கும் மணியுணவாய் ஆகுமடா!
மண்ணே உணவாகுமா மூடர்களே? !
இதை உணராதார் என் ரசிகரில்லை என்றான்! 💪
நாயகர் ஒவ்வொருவரும் நெறித்தால் தம் படை,
ஓங்கும் கலையும் பண்பாடும் உயர்வான கதியிலே!
மண் தின்றால் ஓடாது என சொல்லும் வெற்றித்தேர் இங்கே!
மக்கள் மனம் கவர்ந்தால் மாமன் ஆளுவான் எங்கும்! 👑
பகுத்தறிவைப் போற்றும் சூரிக்கு என் வாழ்த்துகள்! 💐
