டாம் க்ரூஸ்
தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா காலம் தொட்டு இன்று வரை தமிழ் சினிமாவில் இரண்டு அல்லது மூன்று நாயகர்கள் கோலோச்சுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் என்றில்லை, பிற மொழி சினிமாக்களிலும் இதனைக் காண முடியும். ஆனால், அந்த நாயகர்களைத் தாண்டி பிறரது படங்களையும் ரசிகர்கள் காலம்காலமாக ரசித்து வருகின்றனர். அவர்களது வெற்றிகளைக் கொண்டாடுகின்றனர்.
டி.ஆர்.மகாலிங்கம் காலம் தொட்டு எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்படிப்பட்ட நாயகர்களை நம்மால் உதாரணம் காட்ட முடியும். அந்த வகையில், தமிழ் ரசிகர்கள் மனதில் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர் ‘ஜெயம்’ ரவி.
அவர் நடித்த படங்களை ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டுக் கொண்டாடுகிற ரசிகர்களும் உண்டு. தாஸ், தீபாவளி, எங்கேயும் காதல், ஆதி பகவன், வனமகன், சைரன் என்று அவர் நடித்து சுமாரான வெற்றிகளைப் பெற்ற படங்கள் கூட அவற்றில் அடங்கும்.
அதற்கு காரணம், அப்படங்களின் உள்ளடக்கத்தோடு ஜெயம் ரவி தனது பாத்திரத்தைப் பொருத்திக் கொண்ட விதம். அவரைத் தவிர இன்னொரு நாயகனை அப்பாத்திரமாக நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அந்த வகையில், அவர் நாயகனாக நடித்த முதல் படமான ‘ஜெயம்’ அதற்கொரு உதாரணமாகத் திகழ்கிறது.
பழைய விளம்பர உத்தி!
இயக்குனர் தேஜா தெலுங்கில் நிதினை நாயகனாக அறிமுகப்படுத்திய படம் ‘ஜெயம்’. அதன் மாபெரும் வெற்றியைக் கண்டபிறகு, அதனை அப்படியே தமிழில் ஆக்கலாம் என்று நினைத்தார் எடிட்டர் மோகன். ‘ஹனுமான் ஜங்ஷன்’ படத்தை முதன்முறையாக இயக்கிய தனது மகன் ராஜாவையும் இளைய மகன் ரவியையும் அப்படத்தின் வழியே தமிழில் அறிமுகப்படுத்த முனைந்தார்.
அப்படித்தான் தமிழிலும் ‘ஜெயம்’ உருவானது. தெலுங்கில் நடித்த கலைஞர்கள், அதில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களில் சிலர் இதிலும் நடித்தனர். தென்காசி, செங்கோட்டை, மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
2003ஆம் ஆண்டு ‘ஜெயம்’ படம் வெளியாவதற்கு முன்னர், தமிழ்நாடெங்கும் கருப்பு வெள்ளை வண்ணத்தில் அமைந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில் புதிதாகப் படம் ஒன்று வெளியாவது தொடர்பான வாசகங்களே இடம்பெற்றிருந்தன.
வழக்கமாக, சில அறிவிப்புகள் மட்டுமே அப்படி வெளியிடப்படும். சினிமா விளம்பரம் என்றால் பல வண்ணத்தில், நிறைய செலவில் ஜொலிப்புடன் இருக்கும் என்ற எண்ணமே அப்போது பரவலாக இருந்தது. அதுவே, ‘இது பழைய விளம்பர உத்தியா இருக்கே’ என்று ரசிகர்களை எண்ண வைத்தது. ‘அமெச்சூரா படம் பண்றாங்க போல’ என்ற பேச்சைப் பரவலாக்கியது.
ஆனால், ‘ஜெயம்’ படம் வெளியானபிறகு ‘இந்த படத்துக்குத்தான் அப்படி விளம்பரம் பண்ணாங்களா’ என்று பலரையும் புருவம் உயர்த்த வைத்தது அதற்குக் கிடைத்த வரவேற்பு. ஏனென்றால், விளம்பரச் சுவரொட்டியில் இருந்த எளிமையும் சிக்கனமும் படத்தில் தலைகீழாக இருந்தன; பிரமாண்டமானதொரு படம் பார்த்த அனுபவம் ரசிகர்களுக்குக் கிடைத்தது.
செந்தில், பிரகதி, ராஜீவ், நிழல்கள் ரவி, ராதாரவி, நளினி, மயில்சாமி, இளவரசு, மனோபாலா, ரமேஷ் கன்னா, சுமன் ஷெட்டி, ஜுனியர் பாலையா, ஷகீலா, அனாமிகா பிரவலிகா, கல்யாணி, ரேஷ்மி மேனன் என்று பெரும் நட்சத்திரப் பட்டாளமே படத்தில் இடம்பெற்றிருந்தது. சதா, ஜெயம் ரவி ஜோடியின் காதல் காட்சிகள் எளிமையானதாகவும் ஈர்ப்பதாகவும் இருந்தன.
ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் காட்சியாக்கம், ஒட்டுமொத்தப் படத்தையும் ஒரு நொடி கூடப் பார்வையை அகற்றாமல் பார்க்கச் செய்தது. ரசிகர்களை ஆட்டுவிக்கும் வகையில் அமைந்தது ஆர்.பி.பட்நாயக்கின் இசை. தெலுங்கு பட வாசனை அதிகமிருந்தபோதும், ராஜாவின் ஆக்கத்தை ரசித்தது திரையுலகம். அதனாலேயே, தமிழிலும் ‘ஜெயம்’ நல்லதொரு வெற்றியாக மாறியது.
நிதானமான அணுகுமுறை!
ஒரு படம் வெற்றி பெற்றதுமே, அதே பாணியில் பல கதைகளில் நடிக்க ஒப்புக்கொள்வது சிலரது வழக்கம். ஆனால், ஒரு படம் நடித்து முடித்தபிறகே அடுத்த படப் பணிகளில் ஆர்வம் காட்டுவது என்ற அணுகுமுறை அரிதாக மிகச்சிலரிடம் மட்டுமே இருக்கும். அதனைத் தனதாக்கிப் பின்பற்றி வருபவர் ரவி. சில படங்கள் பல காரணங்களால் தடைபட்டபோதும், மிகுந்த தாமதத்தைச் சந்தித்தபோதும் கூட, அவர் அதனை மாற்றிக் கொள்ளவில்லை.
அந்த நிதானம் தான், 21 ஆண்டுகளில் 30 படங்களில் அவர் நாயகனாக நடிக்கக் காரணமாக விளங்குகிறது. பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை ஆகியன அடுத்து அவரது நடிப்பில் வெளியாகவிருக்கின்றன. இந்த எண்ணிக்கையே ஜெயம் ரவி தனது படத் தேர்வில் மிகுந்த நிதானத்தைக் கடைபிடிப்பதை வெளிக்காட்டும்.
ஜெயம் படத்தின் வெற்றியையும், அதன் நாயகனான ரவியின் ஏற்றத்தையும் தனித்தனியே பிரித்துப் பார்ப்பதென்பது முடியாத காரியம். வெறுமனே அப்படத்தின் பெயர், அவருடன் இணைந்திருப்பது மட்டுமே அதற்குக் காரணமல்ல. அந்த படத்திற்குக் கிடைத்த வரவேற்புக்குக் குடும்பத்துடன் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்ததே காரணம் என்பதை அவரும், அவரது குடும்பத்தினரும் உணர்ந்தனர். அதற்கேற்ப, ரவியின் படங்கள் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் அமையுமாறு பார்த்துக் கொண்டனர். இன்றும், அப்படிப்பட்ட அடையாளமே அவரது படங்களை ஆவலுடன் எதிர்நோக்கக் காரணமாக உள்ளது.
சமீபத்தில் வந்த இறைவன், சைரன் போன்ற படங்கள் அந்த பாதையில் இருந்து விலகி நின்றதாலேயே தோல்வியைச் சந்தித்தன. ஜெயம் ரவி நடித்து தோல்வியுற்ற இதர படங்களிலும் கூட, இந்த ஒரு விஷயம் விடுபட்டுப் போயிருப்பதை நம்மால் உணர முடியும்.
’ஜெயம்’ திரைப்படமானது 2003, ஜுன் 21 அன்று வெளியானது. அதாவது, ரவி திரையில் அறிமுகமாகி தற்போது 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
தனது படங்கள் தோல்வியுறும்போது, ஒரு இடைவெளிக்குப் பிறகு தொடர்ச்சியாக வெற்றிப் படங்கள் தருவது ரவியின் வழக்கம். அந்த வகையில், இனிவரும் நாட்களில் அவரது ‘ஜெயம்’ தொடரட்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று” : ஸ்டாலின் வேதனை!
”கள்ளச்சாராய மரணத்திற்கு அரசின் அலட்சியமே காரணம்” : பா.ரஞ்சித்
”சட்டவிரோத மதுபான உற்பத்தியை தடுப்பதில் குறைபாடு” : ஆளுநர் ரவி குற்றச்சாட்டு!
திருச்சி சூர்யா, கல்யாண ராமன் சஸ்பெண்ட்: பாஜக மையக் குழு கூட்டத்தில் புயல் கிளப்பிய தமிழிசை
ஹெல்த் டிப்ஸ்: தூக்கத்தில் பற்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?