போர் நிறுத்தம்.. நாடு நாடாக போய் பெருமிதம் பேசும் டொனால்ட் டிரம்ப்- நெருக்கடியில் மத்திய அரசு!

Published On:

| By Minnambalam Desk

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த முயற்சிகள் குறித்து அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பெருமிதம் தெரிவித்து வருகிறார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாக கேள்வி எழுப்பி வரும் நிலையில் டிரம்ப்பின் பெருமித பேச்சால் மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக Operation Sindoor ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர்ச் சூழல் உருவானது. இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளும் 4 நாட்களாக இடைவிடாமல் தாக்குதல்கள் நடத்தின.

இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையீட்டால் இருநாடுகளும் தாக்குதல்களை நிறுத்திவிட்டன. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தை டொனால்ட் டிரம்ப்தான் முதலில் அறிவித்தார். இதனையடுத்தே இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் அதிகாரப்பூர்வமாக தாக்குதல்கள் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன.

இந்தியாவைப் பொறுத்தவரையில் 3-வது நாடு ஒன்றின் தலையீட்டை எப்போதும் அனுமதிப்பது இல்லை. ஆனால் பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை மத்திய அரசு ஏன் அனுமதித்தது? என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனால் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக மத்திய அரசு எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதும், பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமான படைதளத்தில் போர் வீரர்களிடையே உரையாற்றிய போதும் எதுவுமே விளக்கம் தரவில்லை.

இந்த பின்னணியில் சவுதி அரேபியா சென்ற டொனால்ட் டிரம்ப், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரை தாமே நிறுத்தியதாக மீண்டும் பெருமிதத்துடன் பேசி இருக்கிறார். இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தங்களை முன்வைத்தே இந்த போர் நிறுத்தத்தை தாம் செயல்படுத்தியதாகவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், செல்லும் நாடுகளில் எல்லாம் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்துக்கு தாமே காரணம் என இடைவிடாமல் பேசி வருவது மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share