இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையிலும் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் இந்த தாக்குதல்களுக்கு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச முதல்வர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இருநாடுகளிடையே கடந்த 4 நாட்களாக உச்சகட்ட போர்ச் சூழல் நிலவியது. பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்ததைத் தொடர்ந்து இந்தியாவின் ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் இடைவிடாமல் நடத்திய டிரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல்களில் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் பலர் படுகாயமடைந்தனர். இந்தியா மீது ஏவப்பட்ட டிரோன்கள், ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டன. பாகிஸ்தானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலடி தர, பாகிஸ்தானின் ராணுவ நிலைகள், விமான படை தளங்கள் மீதும் இந்தியா தாக்குதல் நடத்தியது.
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான இந்தப் போர்ச்சூழல் உலக நாடுகளை கவலையடைய வைத்தன. இதனைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சிகளை மேற்கொண்டார். 49 மணிநேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவில், இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் நிறுத்த அறிவிப்பையும் மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் கட்ச் எல்லை வரையில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து உச்ச உஷார் நிலையில் உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் இடைவிடாமல் கேட்கும் குண்டு சப்தங்கள் தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் உமர் அப்துல்லா, போர் நிறுத்தம் என்னதான் ஆச்சு? இடைவிடாமல் குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்கிறதே? என காட்டமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
