பாகிஸ்தான் மீதான அனைத்து தாக்குதல்களையும் இந்தியா நிறுத்துவதாக அறிவித்ததால் வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அவரது குடும்பத்தினரை சமூக வலைதளங்களில் ‘வலதுசாரி’ ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சிப்பது சர்ச்சையாகி இருக்கிறது.
பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல்கள் தொடர்பாக டெல்லியில் நாள்தோறும் செய்தியாளர்களை சந்தித்து விவரித்து வந்தார் வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி. அமெரிக்காவின் முயற்சிகளைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தம் அறிவிப்பையும் இதேபோல செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார் விக்ரம் மிஸ்ரி.
ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து அழித்திருக்க வேண்டும்; அதைவிட்டு விட்டு போர் நிறுத்த அறிவிப்பை எப்படி வெளியிடலாம் என மத்திய அரசு மீது கோபத்தைக் காட்டாமல், மத்திய அரசின் அதிகாரியான வெளியுறவுச் செயலாளர் விகிரம் மிஸ்ரியை வலதுசாரிகள் மிக கடுமையாக விமர்சித்தனர். அத்துடன் அவரது குடும்பத்தினரையும் இழிவுபடுத்தி அவதூறு பதிவுகளை பகிர்ந்தனர் வலதுசாரிகள்.
இதனையடுத்து விக்ரம் மிஸ்ரி தமது சமூக வலைதளக் கணக்கில் பதிவுகள் இடம் பெறாத வகையில் லாக் செய்து வைத்துள்ளார். விக்ரம் மிஸ்ரி மீதான இந்த அவதூறு தாக்குதலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மஜ்லிஸ் கட்சியின் தலைவராக அசாதுதீன் ஓவைசி, விக்ரம் மிஸ்ரி நேர்மையான அதிகாரி; நாட்டுக்காக ஓய்வின்றி பாடுபடுகிறவர். அரசு எடுக்கும் முடிவுகளுக்கு விக்ரம் மிஸ்ரி எப்படி பொறுப்பேற்பார்? அவரை சமூக வலைதளங்களில் விமர்சிப்பது சரியானது அல்ல என கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ் கூறுகையில், வெளியுவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை ட்ரோல் செய்வது வெட்கப்படக் கூடிய நிகழ்வாகும். விக்ரம் மிஸ்ரி, அவரது மகளை சமூக வலைதளங்களில் அவதூறு செய்வது ஏற்புடையதும் அல்ல. இதனை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தமது எக்ஸ் பக்கத்தில், தேசவிரோத சக்திகள்தான் அனைத்து வரம்புகளையும் மீறி விக்ரம் மிஸ்ரி, அவரது குடும்பத்தினரை அவதூறு செய்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு அல்லது மத்திய அமைச்சர்கள் யாருமே விக்ரம் மிஸ்ரிக்கு ஆதரவாக பேசுவதற்கு முன்வரவில்லை. இத்தகைய அவதூறுகளை பரப்பும் சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.