தான் சிபிஎஸ்இ பள்ளி நடத்துவதாக அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார். cbse school thiruma reply annamalai
தேசிய கல்விக் கொள்கையின் கீழ் வரும் மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ.2152 கோடியை விடுவிப்போம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசுக்கு எதிராக சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தின. தமிழகத்தில் இந்தியை திணிக்க முயல்வதாகவும் அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பேசும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சிபிஎஸ்இ மும்மொழி பாடத் திட்டமே இருக்கிறது என்று விமர்சனம் செய்து வருகிறார். மேலும், சென்னை வேளச்சேரியில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தைக் கொண்டு செயல்படும் ப்ளூ ஸ்டார் பள்ளியின் நிர்வாகக் குழு தலைவராக விசிக தலைவர் திருமாவளவன் இருக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “நான் சிபிஎஸ்இ பள்ளி எதையும் நடத்தவில்லை. எங்கள் இடத்தில் ஒருவர் நடத்தத் தொடங்கியுள்ளார். அதுவும் பள்ளிக்கு பெயர் மட்டும் தான் அறிவித்துள்ளனர். இன்னும் பள்ளி செயல்பட தொடங்கவே இல்லை. எங்கள் இடம் என்பதால் என்னுடைய பெயரை பயன்படுத்தியுள்ளனர். அவ்வளவுதான்.
இரட்டை வேடம் போட வேண்டிய நிலை எனக்கு இல்லை. அண்ணாமலை பரபரப்புக்காக ஒவ்வொரு நாளும் எதையாவது பேசி வருகிறார். அவருக்கு ஊடக கவன ஈர்ப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. நாகரீக அணுகுமுறை என்பதை முற்றிலும் தவிர்த்துவிட்டு, யாரையும் எப்படியும் விமர்சிக்கலாம் என்ற நிலைப்பாட்டுடன் அரசியல் செய்கிறார்” என்று தெரிவித்தார்.
மேலும், “இந்தி உள்பட எந்த மொழி மீதும் எனக்கு வெறுப்பு கிடையாது. அன்னை மொழியை காப்போம், அனைத்து மொழிகளையும் மதிப்போம் என முழங்கக் கூடியவர்கள் நாங்கள். ஆனால், இந்தியை இந்தியாவில் உள்ள எல்லோரும் கட்டாயம் கற்க வேண்டும் என்ற தேவை எங்கிருந்து வந்தது? ஒரே தேசம், ஒரே மொழி என்ற நிலைப்பாட்டில் மும்மொழிக் கொள்கை இருப்பதால் எதிர்க்கிறோம்” என்றும் அவர் விளக்கம் அளித்தார்.