“விடிய விடிய கண் முழிச்சுப் படிச்சேன்… புத்தகத்துல இருக்கிறத அப்படியே எழுதினேன், ஆனாலும் மார்க் குறைஞ்சிருச்சே?” என்று இனி மாணவர்கள் புலம்பத் தேவையில்லை. அதேசமயம், “புரிஞ்சு படிக்கலனா பாஸ் ஆகுறதே கஷ்டம்” என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE).
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் (Exam Pattern), சிபிஎஸ்இ மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் (NEP 2020) பரிந்துரைப்படி, மாணவர்களின் மனப்பாடத் திறனை (Rote Learning) ஓரங்கட்டிவிட்டு, அவர்களின் புரிதல் திறனை (Conceptual Understanding) சோதிக்கும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்படவுள்ளது.
புதிய ‘பேட்டர்ன்’ எப்படி இருக்கும்?
வரவிருக்கும் கல்வியாண்டு முதல், 10ஆம் வகுப்புத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் இப்படித்தான் இருக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது:
- 50% திறன் சார் கேள்விகள் (Competency-Based Questions): மொத்த வினாத்தாளில் பாதிக்குப்பாதி, அதாவது 50 சதவீத கேள்விகள் மாணவர்களின் திறனைச் சோதிக்கும் வகையில் இருக்கும். இதில் மல்டிபிள் சாய்ஸ் (MCQ), கேஸ் ஸ்டடி (Case Study) மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒருங்கிணைந்த கேள்விகள் (Source-based Integrated Questions) இடம் பெறும்.
- குறையும் ‘தியரி’ கேள்விகள்: இதுவரை 40 சதவீதமாக இருந்த குறுகிய மற்றும் விரிவான விடை அளிக்கும் கேள்விகள் (Short & Long Answer Questions), தற்போது 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இனி பக்கம் பக்கமாகப் பத்தி எழுதுவதை விட, ‘பாயிண்ட்’டாக பதில் சொல்வதுதான் முக்கியம்.
- மீதமுள்ள 10%: வழக்கம் போலத் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் (Select Response Type) வகையில் அமையும்.
ஏன் இந்தத் திடீர் மாற்றம்?
பல ஆண்டுகளாகவே நம் கல்வி முறையில் ‘மனப்பாடம்’ செய்வதுதான் பிரதானமாக இருந்தது. இதை மாற்றி, “படித்த கல்வியை நிஜ வாழ்க்கையில் எப்படிப் பயன்படுத்துவது?” என்ற சிந்தனையை மாணவர்களிடம் வளர்ப்பதே இதன் நோக்கம்.
மாணவர்களுக்கு லாபமா? நஷ்டமா?
இது ஒருவகையில் மாணவர்களுக்கு ‘ஜாக்பாட்’ தான்.
- மனப்பாடம் செய்யும் சுமை குறையும்.
- புரிந்து படித்தால், முழு மதிப்பெண்ணையும் (Centum) எளிதாக அள்ளலாம்.
- எதிர்காலத்தில் நீட் (NEET), ஜேஇஇ (JEE) போன்ற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள இப்போதே அடித்தளம் அமையும்.
எச்சரிக்கை:
“புதிய முறைதானே பார்த்துக்கலாம்” என்று மெத்தனமாக இருக்க வேண்டாம். ஆசிரியர்கள் இனி பாடம் நடத்தும்போது, ஒவ்வொரு வரியையும் மாணவர்களுக்குப் புரியும்படி விளக்க வேண்டும். மாணவர்களும் வகுப்பறையில் கூர்மையாகக் கவனித்தால் மட்டுமே இந்தப் புதிய வினாத்தாளைச் சமாளிக்க முடியும்.
