சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக முன்னாள் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை சர்வதேச கடத்தல் கும்பலோடு சேர்ந்து வெளிநாட்டில் விற்க உதவியதாக எழுந்த குற்றஞ்சாட்டின் பேரில், திருவள்ளூர் டிஎஸ்பியாக இருந்த காதர்பாஷா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்புராஜ் இருவரையும் கடந்த 2018ஆம் ஆண்டு அப்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் கைது செய்தார்.
அதனையடுத்து அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்த பொன்.மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காதர்பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், டெல்லி சிபிஐ இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து, பொன்மாணிக்கவேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
அதன் தொடர்ச்சியாக சென்னை பாலவாக்கத்தில் உள்ள பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று (ஆகஸ்ட் 10) காலை முதல் சுமார் 7 மணி நேரம் சோதனை நடத்தினர்.
அப்போது ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படும் நிலையில் இதுதொடர்பாக பொன்.மாணிக்கவேலுவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அதனையடுத்து சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக பொன்மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர், குற்றச்சதி (120பி),
அரசு ஊழியர் சட்டத்துக்கு கீழ்படியாமல் நடத்தல்(166),
மற்றவருக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்து சட்டத்துக்கு கீழ்படியாமல் நடத்தல் (166ஏ),
உள்நோக்கத்துடன் பொய்யான ஆவணங்களை தயாரித்தல் (167),
தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தொல்லை தருதல் (182),
உள்நோக்கத்துடன் பொய் சாட்சியம் அளித்தல் (193),
மற்றவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல் (195ஏ)
பொய்யான சாட்சியத்தை பயன்படுத்துதல் (196),
அரசு ஊழியர் பொய்யான வாக்குமூலம் அளித்தல் (199),
பொய்யென தெரிந்தே தகவலை தெரிவித்தல் (203)
ஒருவருக்கு துன்பம் உண்டாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் அவர் மீது குற்றஞ்சாட்டி நடவடிக்கை எடுத்தல் (211),
அரசு ஊழியர் ஒருவர் தவறான பதிவேட்டை பயன்படுத்துதல் (218),
மிரட்டல்(506) ஆகிய 13 பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதற்கிடையே சிபிஐ சோதனைக்கு பின்னர் அவர் அளித்த பேட்டியில், “என் மேலே ஓராயிரம் வழக்குகள் உள்ளன. நான் சாகும்வரை என்னை விசாரித்து கொண்டே இருப்பார்கள்” என்றவர், நாளை செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும், அப்போது அனைவரையும் தூக்கி வாரி போடும் வகையில் முக்கியமான தகவல் தெரிவிப்பேன் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை பொன்மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வினோத் போகத்துக்கு வெள்ளி கிடைக்குமா? : இன்று இரவு தீர்ப்பு!
திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் நிகழ்த்திய அதிசயம்! அந்த பெண் இப்போ ஹேப்பி!