விசாரணையில் புஸ்ஸி, ஆதவ்…குடையும் சிபிஐ…டெல்லி மர்மம் !

Published On:

| By Mathi

Delhi CBI

தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பாக டெல்லியில் இன்று (டிசம்பர் 29) சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ADVERTISEMENT

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இதனையடுத்து கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள் அங்கேயே முகாமிட்டு விசாரணை நடத்தினர். கரூர் போலீசார், தவெக நிர்வாகிகள், படுகாயமடைந்தவர்கள், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் என 200-க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடத்தினர் சிபிஐ அதிகாரிகள்.

இந்நிலையில் திடீரென சிபிஐ அதிகாரிகள், தமிழ்நாட்டில் கரூரில் நடந்த சம்பவத்துக்கு டெல்லியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, தவெக பொதுச்செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மா.செ. மதியழகன் உள்ளிட்டோர் இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது.

ADVERTISEMENT

இதேபோல கரூர்மாவட்ட ஆட்சியர் தங்கவேல், கரூர் எஸ்பி ஜோஷ் தங்கையா, போலீஸ் அதிகாரிகள் பிரேமானந்தன், செல்வராஜ், மணிவண்ணன் உள்ளிட்டோரும் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று நடைபெறும் விசாரணையில் 20-க்கும் மேற்பட்டோர் ஆஜராக உள்ளனர்.

ADVERTISEMENT

41 பேர் பலியான சம்பவம் நிகழ்ந்த கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் திடீரென டெல்லிக்கு அனைவரையும் வரவழைத்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

  • இதுநாள் வரை கரூரில் விசாரணை நடத்திய நிலையில் இப்போது திடீரென டெல்லியில் ஏன் விசாரணை நடைபெறுகிறது?
  • சம்பவம் நடந்த கரூரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில் டெல்லியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது ஏன்?
  • டெல்லியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இன்று முதல் விசாரணை நடைபெறுவதால் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினர், படுகாயமடைந்தவர்கள், மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோரும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட இருக்கின்றனரா?
  • கரூர் சம்பவ விசாரணையை முன்வைத்து தவெகவுக்கு மத்தியில் ஆளும் பாஜக, அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுப்பதற்காக விசாரணையை டெல்லிக்கு திடீரென மாற்றி உள்ளதா? என்பது உள்ளிட்ட ‘விடை தெரியாத’ கேள்விகள் எழுந்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share