கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (நவம்பர் 21) உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக முதல்வர் ஆலோசனை செய்து முடிவெடுப்பார் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருந்தார்.
இந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தார்.
இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (நவம்பர் 21) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “நெடுஞ்சாலைத் துறையில் 4800 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இவ்வளவு பேசுகிற எடப்பாடி பழனிசாமி, உச்ச நீதிமன்றத்தை நாடி சிபிஐ விசாரணைக்கு தடை பெற்றார். இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சிபிஐ விசாரணை தேவையில்லை என்று எடப்பாடி பழனிசாமி சொன்னார். அதற்கு நாங்கள் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.
திமுக எப்போதும் சிபிஐ விசாரணை கோராது. அதற்கு காரணம் உண்டு.
2016ஆம் ஆண்டு தேர்தல் சமயத்தில் 570 கோடி ரூபாய் கண்டெய்னர் லாரியில் பிடிபட்டது. அப்போது அதிமுகதான் ஆட்சியில் இருந்தது.
கோவையில் இருந்து வரும் வழியில் திருப்பூரியில் வைத்து தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர். இதுதொடர்பாக திமுக வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 2024 முடியப் போகிறது. ஆனால் இதுவரை சிபிஐ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் கள்ளக்குறிச்சி சம்பவத்தை பொறுத்தவரை முதல்வர் ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுத்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்தது முதல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தது, சஸ்பெண்ட் செய்தது வரை அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். இவர்கள் ஆட்சியில் எதுவும் நடக்கவில்லையா?
தலித் எழில்மலை மருமகன் கொலை செய்யப்பட்டார். இரண்டு நாட்கள் முன்பு தான் இவ்வழக்கில் தீர்ப்பு வந்தது. இந்த கொலை யார் ஆட்சியில் நடந்தது?
தனிப்பட்ட கொலைகளுக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் சம்பந்தமில்லை என்பதை முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும். ஒசூர் இளைஞர் கொலை செய்யப்பட்டது தனிப்பட்ட விவகாரம். தஞ்சாவூர் ஆசிரியை கொலை செய்யப்பட்டதும் தனிப்பட்ட விவகாரம்
தூத்துக்குடியில் நடைபெற்றதுதான் சட்ட ஒழுங்கு பிரச்னை, 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடைசி காலத்தில் வாழ்ந்தது கொடநாட்டில்தான். அங்கு கொலை கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது அதிமுக ஆட்சியில்தான்.இது சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு அடையாளம்.
இவர்கள் ஆட்சியில் கும்பகோணம், பெரம்பலூர், ராமநாதபுரம், கோவை, சென்னை என 2018 முதல் 2021 வரை பல ஆசிரியர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்ட ஆர்.எஸ்.பாரதி, மேலும், ”எடப்பாடி ஆட்சிக் காலத்தில் 1,672 கொலைகள் நடந்திருக்கின்றன. ஆனால் கடந்த ஜூன் மாதம் வரையில் 792 கொலைகள் நடந்திருக்கின்றன. சென்னை ஆணையராக அருண் வந்த பிறகு, ரவுடிசம் குறைந்திருக்கிறது” என்றார்.
அவரிடம் மூன்று ஆண்டுகளில் 6,000 கொலைகள் நடந்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே என்ற கேள்விக்கு, “நானும் ஆதாரத்துடன் சொல்கிறேன். அப்படி பார்த்தால் அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா இருந்தது முதல் எடப்பாடி ஆட்சி முடியும் வரை ஒரு லட்சம் கொலைகள் நடந்திருக்கின்றன.
கள்ளக்குறிச்சி விவகாரத்தை வைத்தும், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பத்தை குறிப்பிட்டும் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். அப்படி இருந்தும் விக்கிரவாண்டியில் திமுதான் வெற்றி பெற்றது. மக்கள் திமுக பக்கம் இருக்கிறார்கள்” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
2,100 கோடி ஊழல்… அதானி எப்போது கைது? – மோடியை விளாசிய ராகுல்
56 ஆண்டு காலத்தில் எந்த இந்திய பிரதமரும் போனது கிடையாது… அங்கேயும் லேண்ட் ஆயிட்டார் மோடி