நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடிக்கு முஸ்தபா என்பவர் உரிமை கோரியிருந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணையில் அவரது பணம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் பணிபுரியும் 3 பேர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் எடுத்து சென்ற ரூ.4 கோடியை தேர்தல் ஆணைய பறக்கும் படையினர் மற்றும் தாம்பரம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக இந்த பணம் எடுத்து செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து இந்த வழக்கில் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். இதுவரை இந்த வழக்கில் 15 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்தநிலையில், ஈரோடு ரயில் நிலையத்தில் கேண்டீன் நடத்திவரும் முஸ்தபா என்பவர் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி தன்னுடையது என்று சிபிசிஐடி போலீசாரிடம் உரிமை கோரியிருந்தார். இதனையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மோசடியாக முஸ்தபா பணத்திற்கு உரிமை கோரியது அம்பலமாகியுள்ளது.
தொடர்ந்து முஸ்தபாவிடம் யார் யார் தொலைபேசியில் பேசினார்கள் என்ற பட்டியலை தயார் செய்து போலீசார் இந்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கருடன் பட இயக்குநர்… லெஜெண்ட் சரவணன் போடும் திட்டம்!
“தெறிக்க விட்டான் வந்தல்லே” – ‘வேட்டையன்’ ஆடியோ லாஞ்ச் எப்போது?
Comments are closed.