வெளிமாநில வியாபாரிகள் வருகை: மாடுகள் விற்பனை மும்முரம்!

Published On:

| By admin

ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வருகையால் மாடுகள் விற்பனை மும்முரமாக காணப்பட்டது.

ஈரோடு, கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் மாட்டுச் சந்தை கூடுகிறது. அதுபோல் நேற்று கூடிய சந்தைக்கு ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் 400 பசு மாடுகள், 250 எருமை மாடுகள் என மொத்தம் 650 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. மேலும், 50 கன்றுக்குட்டிகளும் கொண்டு வரப்பட்டு இருந்தன.

இந்த மாடுகளை வாங்குவதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர். இதனால் மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

இதில் பசு மாடுகள் ரூ.30,000 முதல் ரூ.70,000 வரையிலும், எருமை மாடுகள் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரையிலும் விலை போனது. இதேபோல் கன்றுக்குட்டிகள் ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை விற்பனையானது. இந்த மாடுகளை வியாபாரிகள் விலை பேசி பிடித்து சரக்கு வாகனங்களில் ஏற்றி தங்களது பகுதிக்கு கொண்டு சென்றார்கள்.

தமிழக விவசாயிகள், வியாபாரிகளை காட்டிலும் வெளிமாநில விவசாயிகள், வியாபாரிகள் பலர் மாடுகளை பிடித்து சென்றதாகவும் இந்த சந்தையில் 85 சதவிகித மாடுகள் விற்பனையானதாகவும் சந்தை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

**-ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share