ADVERTISEMENT

சாதி இல்லை எனும் பொய்மை ஒழியட்டும்! நேரடி கள ஆய்வுத் தொடர் – பாகம் 1!

Published On:

| By Manjula

caste system is still dominant in India

நோக்கம்

தமிழ் ஊடக வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக, உலக அரங்கில் வெளியாகும் சிறப்புக் கட்டுரைகளை தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்யும் நோக்கத்தில், மின்னம்பலம் இணையதளம் மற்றும் அமெரிக்காவின் பெருமைமிகு கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ’லாஜிக்ஸ்’ பத்திரிக்கை இணைந்து வழங்கும், சாதி இல்லை என்ற கற்பிதத்தை உடைக்கும் நேரடி கள ஆய்வுத் தொடர். லாஜிக்ஸ் ஆசிரியர் கதீஜா, சாதிக்கு எதிரான சமூக அறிஞர் முரளி சண்முகவேலன் ஆகியோரது கலந்துரையாடலே இத்தொடரின் போக்கு.

ADVERTISEMENT

சாதி எப்படி சமூகத்திலும், மக்கள் மத்தியிலும் வெகு ஆழமாக பரவியுள்ளது என்பதையும், களத்தில் உள்ள அவல சூழ்நிலைகளையும் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல இத்தொடர் சுட்டிக்காட்டுகிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதையுமே சாதி தன்னுடைய இரும்புக்கரங்களால் இறுகப்பற்றி உள்ளது. சாதிய அவலங்களை எடுத்துரைக்கும் இத்தொடரினை சமூக அக்கறையுடன் செயல்படும் நம்முடைய மின்னம்பலம் இணையதளத்தில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

முன்னுரை

ADVERTISEMENT

பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, சாதி அமைப்பு இந்தியாவுக்கோ அல்லது இந்து மதத்திற்கோ பிரத்தியேகமானதல்ல. இது தெற்காசியா முழுதும், அங்கிருந்து புலம்பெயர்ந்தோர் மத்தியிலும், அனைத்து மதங்களிலும் இயங்கும் வன்முறையுடன் கூடிய ஒடுக்குமுறைச் சமூக அமைப்பாகும்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உறவுமுறைகளைப் பேணுவதற்கும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வதற்கும், மூலதனத்தை எளிதாகப் பெறுவதற்கும் ஒரு கட்டமைப்பை சாதி ஏற்படுத்தியிருக்கிறது.

ADVERTISEMENT

ஆனாலும் பெரும்பாலும் மேற்கத்திய உரையாடல்களில் இனவாதத்திற்கான நீதி, தொழில்நுட்ப விமர்சனம் ஆகியவை மட்டுமே இடம்பெறுகிறது, சாதிய அமைப்பு (ஒருவேளை உரையாற்றினாலும்) இரண்டாம்பட்சமாகத் தான் கருதப்படுகிறது.

முரளி தனது களஆய்வை மேற்கொண்ட தலித் காலனியில் ஒட்டப்பட்டுள்ள பி.ஆர்.அம்பேத்கர் பிறந்தநாள் சுவரொட்டி. புகைப்படங்கள் – முரளி சண்முகவேலன்.

சாதிய அமைப்புகள் 

புலம்பெயர்ந்த தெற்காசிய ஆதிக்க சாதியினர் எப்படி அதிநுட்பமான அதிகார வட்டங்களின் பயனாளிகளாக இருக்கிறார்கள் என்பதை சாதிகள் இல்லை என்ற கட்டுக்கதை மறைக்கிறது.

க்ரிட்டிக்கல் காஸ்ட் டெக் ஸ்டடீஸ் பாடத்திட்டத்தின் ஆசிரியரும், ஆக்ஸ்ஃபோர்ட இன்டர்நெட் இன்ஸ்டிடியூட், ஆக்ஸ்ஃபோர்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளருமான முரளி சண்முகவேலனிடம் உரையாடினோம். முரளி இந்த இயக்கவியல் ஒவ்வொன்றையும் புரிந்து கொள்ளும் வகையில் பேசுகிறார்.

“பார்ப்பனர்களால் மட்டுமே முடியும்” என்று கூறப்படும் தொழில்நுட்பங்களை உண்மையில் உருவாக்கிய தலித்துகள் மற்றும் பழங்குடி மக்களின் நிபுணத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உருவாக்கப்பட்ட ஜாதியகக் கட்டமைப்பு நிர்வாகத்தால் அல்லது உயர் ஜாதி வெறியர்களால் ஒடுக்கப்பட்ட இந்த மக்கள் தான் வரலாற்று ரீதியாக விவசாயத்தில் மரபணு ரீதியான பன்முகத்தன்மையை தக்கவைத்திருந்தார்கள்.

அத்துடன் நாம் அனைவரும் நம்பியிருக்கும் சாதனங்களுக்குள் சிறிய பாகங்களைப் பொறுத்தும் கைவினைத் திறன்களையும் கொண்டிருந்தார்கள்.

அரசியலமைப்பு சட்டம் 

கதீஜா: சாதி என்றால் என்ன, அது எவ்வாறு வழிவழியாக வருகிறது என்பதை எங்களுக்கு மேலோட்டமாகப் புரிய வைக்க முடியுமா?

முரளி: இதை விளக்குவதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி கதீஜா. சாதி என்றால் என்ன என்பதை விளக்குவது மிகவும் அவசியமானதாகும். மக்கள் பெரும்பாலும், இந்தியாவுடன் தொடர்புடைய ஒரு பாரபட்சம் காட்டும் பிரிவாக சாதியைப் பற்றி பேசுகிறார்கள்; சாதி என்பது உடலில் புரையோடிப் போன ஒரு புற்றுநோயைப் போன்றது.

ஆதிக்க சாதி இந்துகள் சொல்வது போல இது பிரிட்டிஷ் பேரரசால் கண்டுபிடிக்கப்பட்டது இல்லை. பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளில்  அரசியலமைப்புச் சட்டத்தில் சாதி என்பது வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் உள்ள பாங்கி (மெத்தோர்ஸ்) எனும் சாதியினர்  கைகளால் மலம் அள்ளும் வேலை செய்கிறார்கள். அவர்கள் தலித்துகளாகக் கருதப்படுகிறார்கள். சாதி அமைப்பு இந்தியாவில் மட்டுமல்லாமல் தெற்காசியா முழுவதும் பரவலாக உள்ளது.

இது பிரிட்டிஷ் காலனித்துவத்தின் விளைவாக ஏற்பட்ட பிரத்தியேகமான அமைப்பு இல்லை. ஆதிக்கவாதிகளின் கதைகளுக்கு முரணாக, இந்திய தேசிய அரசு உருவாவதற்கு முந்தையதாகும்.

சாதி என்பது இந்து மதத்திற்கு மட்டுமே சொந்தமானதன்று என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்து மதம், அதன் வேத சாஸ்திரங்களில், வர்ணாசிரமத்தின் மிக வலுவான கூறுகளைக் கொண்டுள்ளது என்பதை நான் புரிந்து கொண்டு ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால் சாதி என்பது பாரபட்சம் காட்டும் சடங்குகளும் நடைமுறைகளும் மிகப் பொதுவானதாக அனைத்து மதச் சமூகங்களிலும் வியாபித்திருக்கிறது. அதனால் தான் கேரளாவைச் சேர்ந்த சிரிய கிறிஸ்தவர்கள் பார்ப்பனர்களைப் போல நடந்து கொள்கிறார்கள், தலித் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள்.

இப்படிச் சொல்வதானால், இந்துத்துவவாதிகள் சாதி வெறியை மேலும் தூண்டிவிட்டு மீண்டும் சாதி அமைப்பை நிலைநாட்டும் இந்த நேரத்தில், குறிப்பாக இந்தியாவில் நிலவும் இத்தகையைச் சூழலை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது.

நாம் சாதி அமைப்புக்கு எதிரான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன் அதன் அனைத்து பன்முக பரிமாணங்களிலும் அதன் வீரியத்தையும்  புரிந்துகொள்ள வேண்டும். புனிதம் , தீட்டு, இந்து மதம் ஆகியவற்றை எதிர்ப்பதே அவசியமான அணுகுமுறையாகும்.

நாம் இங்கு பார்ப்பது, பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்றவாறு சாதியினால் தக்கவைத்துக் கொள்ளவும் தகவமைத்துக் கொள்ளவும் அதன் கோரங்களை கட்டவிழ்த்துவிடவும், மறைத்து வைக்கவும், மீண்டும் வெளிப்படுத்தவும் கூடிய ஒரு நெகிழ்வான அமைப்பாகும்.

 

முக்கிய அம்சங்கள்

எந்தவொரு குறிப்பிட்ட வரிசையிலும் இல்லாமல், சாதி அமைப்பில் 3 முக்கிய அம்சங்கள் உள்ளன:

முதலாவது, ஒரே சாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வது. இனப் பெருக்கத்திற்காக ஒரே சாதிக்குள்ளேயே திருமணங்கள் செய்வதை கட்டாயமாக்கி, பிறக்கும் போதே சாதி அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் ஒரு சாதியின் மக்கள்தொகையை பெருக்கிக்கொள்வதாகும். இந்த சாதி அடையாளங்கள் தொழில் மற்றும் உத்தியோகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது, ஆணாதிக்கம். ஆதிக்க சாதியில் பாலின பேதமின்றி ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களை அடிபணியச் செய்வதும் ஆண்கள் தங்கள் சொந்த சாதிப் பெண்கள் மீதே ஆதிக்கம் செலுத்தி அடிபணியச் செய்வதுமாகும்.

மூன்றாவதாக, ஆதிக்க சாதி.   தாழ்த்தப்பட்ட சாதியினர் அல்லது சாதிய அமைப்புக்கு வெளியே உள்ளவர் என முத்திரை குத்தப்பட்டவர்களை நேரடியாக தீண்டாமை உள்ளிட்ட தீவிரமான சமூக இழிவுக்கு உட்படுத்துவது.

இதற்கு மாறாக,  பார்ப்பனர்கள், க்ஷத்திரியர்கள் போன்ற ஆதிக்க சாதிக் குழுக்கள் ஆன்மீக ரீதியில் புனிதமானவர்களாகவும், தெய்வீகமானவர்களாகவும், தெய்வங்களால் நியமிக்கப்பட்ட தகுதியான சிந்தனையாளர்களாகவும் கருதப்படுகிறார்கள்.

அம்பேத்கர்

சாதியைப் பற்றி பேசும் போது [பீம்ராவ் ராம்ஜி] அம்பேத்கர் குறிப்பிட்ட படிநிலை சமத்துவமின்மை என்ற கருத்து மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் சாதி என்பது ஒரு செங்குத்தான சமூகப் படிநிலைக்குள் உள்ள “0 மற்றும் 1” அல்லது இருகூறு அமைப்பு இல்லை.

குறிப்பாக சாதிய அமைப்பு விஷத்தன்மையுடையது ஆகும். ஏனென்றால் ஒவ்வொரு படிநிலைக் குழுவும் தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்கிறது, அந்த சமூகத்தில் தங்கள் இடத்தின் எல்லைகளை தக்க வைத்துக் கொள்கிறது, தங்கள் சாதியைச் சேராத எவரையும் உதைத்து வெளியேற்றி விடுகிறது.

அம்பேத்கரும் பெரியாரும் சாதிய அமைப்பு பற்றி வலியுறுத்தும் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், தொழில் பிரிவுடன் தொடர்புடையது என்ற மார்க்சிஸ்ட் கருத்துகளுக்கு மாறாக அது தொழிலாளர் பிரிவுடன் தொடர்புடையது என்பதாகும்.

தெற்காசிய வரலாற்று மற்றும் அரசியல் சூழலில், நீங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான தொழிலைச் செய்தால், ஒரு குறிப்பிட்ட வகையான வேலையைச் செய்தால், நீங்கள் ஒரு இழிவான மனிதனாகக் கருதப்படுவீர்கள்.

உழைப்பைச் சுரண்டும் நடைமுறைகளுக்கும் அப்பால் சாதிய அமைப்பு எவ்வாறு தனித்துவமாக இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு தொழிலாளர்களின் பிரிவு  என்பது மிகவும் முக்கியமான கருத்தாகும். தொழில் என்பது சாதிய அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதனால் தான் காந்தி, “சிறந்த பாங்கி”, மலம் அள்ளும் சிறந்த தொழிலாளி சமூகத்திற்கு இன்றியமையாத தனது வேலைகளைச் செய்ய வேண்டும் என்று கூறினார், இது நரேந்திர மோடியின் உரையிலும் பிரதிபலிக்கிறது.

ஒரு வகையில், சாதிய அமைப்பு பரவலாக உள்ளது என்றும் காந்தி முதல் மோடி வரையிலான புள்ளிகளை இணைக்கும் சமூகப் பசை இது என்றும் நான் வாதிடுவேன்.

 

சமூகப் பிரிவுகள்

கதீஜா: கார்னெல் டெக்னியன்னில் இருந்து என்னை நீக்கிய சவர்ண அடிப்படையில் பதவி பெற்றப் பேராசிரியரான தபன் பரிக்கை நான் எப்போதும் நினைத்துப் பார்ப்பேன்.

1 ஒரு நாள், “வெள்ளையர்கள் 400 ஆண்டுகளாக இந்த ஒடுக்கப்பட்ட அசிங்கத்தில் இருந்திருக்கிறார்கள், ஒரு கட்டுப்பாடான சமூகத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது அவர்களுக்கு உண்மையில் புரியவில்லை” என்ற ரீதியில் ஒன்றைச் சொன்னார்.

இந்தியாவில், அனைத்து சூழல்களுக்கும் பொருந்தக்கூடிய மிக, மிக உயரிய அமைப்பான சமூகப் பிரிவுகள் உள்ளன. அதில் அவரவர் இடம் அவரவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இந்த வகையான சமூக பிரிவுகள் சமத்துவமானதா இல்லையா என்பது குறித்து நீங்கள் ஒரு கருத்து கொண்டிருக்கலாம்.

ஆனால் இது ஏதோ ஒரு வகையில் தகுதி அடிப்படையிலானது என்று கூறும் இந்த வெள்ளையர்கள் வைத்திருக்கும் ஒரு பொதுவான கதையை யாரும் நம்பக்கூட மாட்டார்கள். வெள்ளையர்களின் ஆதிக்கம் இந்தியாவைப் போல நேர்த்தியான சமூக நடைமுறைகளையும் வகைப்பாடுகளையும் கொண்டிருக்கவில்லை.

இந்த உரையாடலில், அவர் மார்க்சியம் மட்டும் தான் பொருளாதாரத்தை அடித்தளமாகக் கொண்ட சமூக வகைப்பாட்டின் துல்லியமான கோட்பாடாகும் என்று கதா காலட்சேபம் செய்தார்.

இதைத் தொடர்ந்து, எத்தியோப்பியாவின் தற்போதைய பிரதம மந்திரி அபி அகமதுவையும் திக்ரே பிராந்தியத்திற்கு எதிரான அவரது இனப் படுகொலைப் போரையும் ஆதரித்து ட்வீட் செய்ததற்காக, ஏஐ நெறிமுறைகளின் ஒரு பிரபலமான அறிஞரான அபேபா பிர்ஹானேவை நான் பகிரங்கமாக விமர்சித்ததுதான் அவரது கோபத்தையும் தூண்டி இறுதியாக என்னை பணி நீக்கம் செய்ததற்கும் காரணமாயிற்று.

[பரீக்] என்னிடம் தனிப்பட்ட முறையில், அவர் பிர்ஹானேவுடன் உடன்படுவதையும், தெற்கிலிருந்து புலம்பெயர்ந்து உலகெங்கிலும் உள்ளவர்கள் ஆதிக்கக் குழுக்களிடம் கோருபவைகள் நியாயமற்றது என்று அவர் உணர்வதையும் கூறினார். ஆனால் என்னை நீக்கும் வரையில் அவர் எனக்கு அனுப்பிய பகிரங்கமாக வெளியிடப்பட்ட தொடர்ச்சியான தகவல் பரிமாற்றத்திலிருந்தும் இதை அறிந்துகொள்ள முடிகிறது.

சமூக ஆதிக்கத்தின் சில நடைமுறைகள் சட்டபூர்வமானவை என்று கூறியதோடு அல்லாமல், எத்தியோப்பியனிசம், ஓரோமோபோபியா, மார்க்சிஸம் ஏற்றுக்கொண்ட பார்ப்பன ஆதிக்கம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளையம் அவர் விவரித்தார்.

இந்தியாவில் உள்ள இந்துத்துவாவுடன் ஒப்பிடும்போது எத்தியோப்பிய அரசியலின் வரையறைகளுக்கு பொதுவில் அவ்வளவு ஆதரவு இருப்பதாக நான் நினைக்கவில்லை. பின் நோக்கிப் பார்த்தால், எத்தியோப்பியனிசத்திற்கும் குஜராத்தி வணிகர்களுக்கும் இடையே ஏற்கனவே தொடர்புகள் உள்ளன.

17 ஆம் நூற்றாண்டிலேயே அவை இந்தியப் பெருங்கடல் அடிமை வர்த்தகத்திற்கு நிதியளித்தன, அது பல வழிகளில் நடைமுறையில் இருந்து மீண்டும் சமகால ICT4D (வளர்ச்சிக்கான தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம்) உதவித் தொகையாக இருக்கிறது.

caste system is still dominant in India

மார்க்சியம்

முரளி: உள்கட்டமைப்பும் தொழில்நுட்பமும், சாலைகளும், தகவல் தொடர்பும் வளர்ந்த பின்னர் சாதிய அமைப்பு அழியத் தொடங்கும் என்று கார்ல் மார்க்ஸ் குறைத்து மதிப்பிட்டு எழுதினார். அதைத் தான் அவர் தெற்காசியா பற்றிய தனது எழுத்துக்களில் குறைத்து மதிப்பிட்டு கணித்திருந்தார்.

மேற்கத்திய மார்க்சியத்துடன் ஒப்பிட்டு தெற்காசியாவில் நிலவும் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வதில் உள்ள உண்மையான சிக்கல் என்னவென்றால், சாதியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் எதிர்காலத்தை அது துல்லியமாக கணிக்கவில்லை என்பதேயாகும்.

மார்க்சியம் குறிப்பாக தெற்காசியாவில் பயனளிக்காது, ஏனெனில் வேலை வர்க்கத்துடன் தொடர்புடையது அல்ல என்பதே முதன்மையான காரணமாகும். இங்கு இருப்பது தொழிலாளர்களின் பிரிவு, உழைப்புப் பிரிவு அல்ல. இது சமூகவியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் வேறுபட்டதாகும்.

இந்திய மார்க்சிஸ்ட் கட்சி இயக்கத்தைப் பார்த்தீர்களேயானால், சிறப்புரிமை பெற்ற, ஆதிக்க சாதிப் பின்னணியைச் சேர்ந்தவர்களால் அது வழி நடத்தப்படுகிறது.

சொல்லப்போனால், அம்பேத்கரின் சாதி எதிர்ப்புப் போராட்டத்தை, “முழு சுதந்திரம் என்ற நோக்கத்திலிருந்து, ஹரிஜனங்களின் மேம்பாட்டிற்கான சாதாரண நோக்கத்தை நோக்கி மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்கு வழிகாட்டியது” என்று விமர்சித்த கேரளாவைச் சேர்ந்த மிகவும் பிரபலமான மார்க்சிய அறிவுஜீவி ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் இங்கே இருந்தார்.

எங்களிடம் பத்ரலோக் என்ற சொல்லும் உள்ளது, இது பங்களாதேஷில் உள்ள உயர் நடுத்தர வர்க்க மற்றும் ஆதிக்க சாதி பார்ப்பனர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். மேலும், நீங்கள் பங்களா இலக்கியத்தைப் பார்த்தீர்களேயானால், குறிப்பாக இந்தியப் பகுதியில் இருந்து வரும் பங்களாதேஷ் இலக்கியம் பெரும்பாலும் மார்க்சிஸ்ட் பார்ப்பனர்கள் என்று அழைக்கப்படுபவர்களால் எழுதப்பட்டதாகும்.

இன்று வரை, மார்க்சிஸ்ட் கட்சியைப் பெரும்பாலும் பார்ப்பனர்கள் கட்டுப்படுத்தும் சூழல் தான் இந்தியாவில் நிலவுகிறது.

1. திருத்தம், ஜூன் 22, 2023: லாஜிக்ஸ் முதலில் தபன் பாரீக்கின் சாதி தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. டாக்டர். பரிக், ஜூன் 16 ஆம் தேதி தனது மீடியம் போஸ்ட்டில், அவர் பனியா சாதியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்தார், பின்னர் பனியா என்ற சொல்லை வைஷ்யா என்ற சொல்லாக மாற்றினார். எது உண்மை என்பதை அறிந்துகொள்வதற்கு நாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு பதிலளிக்கும் வகையில் எந்தக் கருத்தையும் சொல்வதற்கு டாக்டர். பரிக் விரும்பவில்லை.

குறிப்பு: இந்த தொடரின் அடுத்த பாகம் வருகின்ற புதனன்று (டிசம்பர் 27) நம்முடைய மின்னம்பலம் இணைய தளத்தில் வெளியாகும். இந்த தொடரின் மூலக்கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ஆசிரியர் குறிப்பு

caste system is still dominant in India by J Gathija

ஜே. கதீஜா 

ஜே. கதீஜா அப்துல் ரஹ்மான் லாஜிக்(ஸ்)ஸின் ஆசிரியர் ஆவார். ஜார்ஜ்டவுன் சட்ட மையத்தின் சிறப்பு உறுப்பினராக இருக்கிறார். ஏஐ நௌ இன்ஸ்டிட்யூட் மற்றும் UCLA வின் சென்டர் ஃபார் கிரிட்டிகல் இன்டர்நெட் இன்கொய்ரியின் முந்நாள் உறுப்பினர். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இன்சைட் இன்ஸ்டிட்யூட்டில் வீ பி இமேஜினிங் நிறுவனத்தை நிறுவியவர்.

தி யுனிவர்சிட்டி ஆஃப் வாஷிங்டன், எச்சிடிஇ துறையுடன் இணைந்து தி அதர்வைஸ் ஸ்கூலை நிறுவினர். மிக சமீபத்திய வெளியீடுகளில் கொலம்பியா ரேஸ் லா ஜர்னல், தி ஃபுனாம்புலிஸ்ட் மற்றும் பராபிராக்ஸிஸ் ஆகியவை அடங்கும். கதீஜாவின் ஆராய்ச்சி அமெரிக்க குடும்பக் காவல் துறை மற்றும் ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்காவின் தொழில்நுட்பத்திற்குள்ளான முன்கணிப்பு அபாய மாடலிங்கில் கவனம் செலுத்துகிறது.

caste system is still dominant in India by murali samuvelan

முரளி சண்முகவேலன்

சாதிக் கொடுமைகளால் நேரடியாக பாதிக்கப்பட்ட முரளி சண்முகவேலன் சாதிக்கு எதிரான அறிஞர் ஆவார். அவருடைய ஆராய்ச்சியானது ஊடகங்களிலும் தகவல் தொடர்பு ஆய்வுகளிலும் டிஜிட்டல் கலாச்சாரத் தளங்களிலும் பொறுப்பேற்க மறுக்கப்படும், குறிப்பாக சாதிக் கொடுமைகள் போன்ற பாதுகாக்கப்பட்ட வகைகள் தொடர்பான சிக்கல்கள் பற்றியதாகும்.

மொழிபெயர்ப்பாளர்: ஜெயசந்திரன் மாசிலாமணி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விவசாயத் தொழிலாளர்களுக்கு விடிவுகாலம் வருமா?

பேரிடரையும் புறக்கணிக்கும் பேரரசா ஒன்றிய அரசு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share