இந்து சமூகத்தின் மிகப்பெரிய பிரச்சினையே சாதி தான் என்றும், காதல் ஜோடிகளை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று (ஆகஸ்ட் 25) பேசியுள்ளார்.
21ஆம் நூற்றாண்டிலும் தமிழகத்தில் ஜாதி ஆணவக் கொலை நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனையடுத்து சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக கொண்டு வர முதல்வர் ஸ்டாலினை பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இன்று தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு இல்லை. எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம். காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன.
நெல்லையில் ஒரே வருடத்தில் 240 கொலைகள் நிகழ்ந்துள்ளது. பொதுச் சமூகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான நிலை உருவாகி உள்ளது. இந்த சூழலை அரசு பயன்படுத்திக் கொண்டு சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை முதலமைச்சர் கொண்டு வர வேண்டும்” என கூறியிருந்தார்.
அதே கருத்தை மதுரையில் செய்தியாளர்ளை இன்று சந்தித்த தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தெரிவித்துள்ளார்.
காதல் ஜோடிகளை வரவேற்கிறோம்!
அவர், “பாஜகவில் நாங்கள் அனைவரும் ஆணவக் கொலைகள் மீது கோபத்தில் இருக்கிறோம். அதற்காக கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்து, யார் தவறு செய்கிறார்களோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக அலுவலகத்திற்கும் பல காதல் ஜோடிகள் நியாயம் கேட்டு வருகிறார்கள். கட்சி அலுவலகம் அனைவருக்கும் பொதுவானது. அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்.
மேல்சாதி, கீழ் சாதி மனநிலை இன்றும் இருக்கிறது!
இந்து சமுகத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சினையே சாதிப் பிரச்சினை தான். நாம் அனைவரும் சமம் என்று சொன்னாலும், சில இடங்களில் மேல், கீழ் என்ற சாதி மனநிலை இன்றும் இருக்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கையில் கயிறு கட்டி செல்கிறார்கள்.
ஆணவக் கொலைகளில் ஈடுபடும் சிறார்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். யாராவது ஒருவர் சாதியைக் காரணம் காட்டி கொலை செய்தால், அவர்கள் 18 வயதுக்குக் குறைவாக இருந்தாலும், அவர்களை மைனராகக் கருதக்கூடாது. 16, 17 வயதில் சாதிக்காக கொலை செய்தால்கூட அவர்களைச் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பாமல் உரிய தண்டனை வழங்க வேண்டும்.
சாதியை ஒழிப்பதற்காக திராவிடக் கட்சி வந்ததாக சொல்கிறார்கள். ஆனால் 2025ஆம் ஆண்டிலும் இருக்கிறது இந்த சாதி இருக்கிறது என்றால் அது தோற்றுவிட்டது என்று தான் அர்த்தம்.
எனவே தமிழக அரசு பள்ளிகளில் பாடத்திட்டத்தைச் சரிசெய்ய வேண்டும். அரசுகள் முன்னுதாரணமாகச் செயல்பட வேண்டும். சாதி ஆணவக் கொலைக்கு எதிராக தமிழக அரசு கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும்” என அண்ணாமலை பேசினார்.
