நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி.ஆ.ராசா, உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்து மதத்தில் உள்ள சாதி பாகுபாடுகளை குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆ.ராசாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் மிட்டாய் வாங்க வந்த பள்ளி குழந்தைகளிடம் சாதி அடிப்படையில் நீங்கள் இனி கடைக்கு வரக்கூடாது என்று கடைகாரர் கூறும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிட பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் குழந்தைகள் பள்ளிக்கு அருகிலுள்ள கடையில் திண்பண்டங்கள் வாங்கி சாப்பிடுவர்.
உங்க யாருக்கும் திண்பண்டம் கிடைக்காது!
வீடியோவில் உள்ளபடி, பள்ளி செல்வதற்கு முன்பாக வழக்கம்போல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் திண்பண்டம் வாங்க சென்றுள்ளனர். அதற்கு அந்த கடைக்காரர், “யாரும் இங்க திண்பண்டம் வாங்க வேண்டாம். நீங்க ஸ்கூலுக்கு போங்க. வீட்ல போயி அந்த கடையில திண்பண்டம் கொடுக்க மாட்டேங்குறாங்கனு சொல்லுங்க” என்கிறார்.
ஆசையோடு மிட்டாய் வாங்க வந்த குழந்தைகள் கடைக்காரர் ஏன் இப்படி பேசுகிறார் என்று புரியாமல் அவரையே பார்த்தபடி நிற்கின்றனர். அப்போது ஒரு மாணவன், ”எதுக்குண்ணே?” என்று கேட்க, அதற்கு கடைகாரர், “கொடுக்கமாட்டாங்கடா! ஊர்ல கட்டுப்பாடு வந்துருக்கு” என்கிறார். உடனே அந்த சிறுவன், ”கட்டுப்பாடா? என்ன கட்டுப்பாடு?” என்று சிரித்தபடியே கேட்கிறான். அதற்கு அவர், “கட்டுபாடுன்னா? உங்க தெருவ சேர்ந்த யாருக்கும் கொடுக்ககூடாதுன்னு சொல்லி ஊர்ல கூட்டம் போட்டு பேசிருக்கு. போங்க” என்று விரட்டுகிறார்.
மிட்டாய் வாங்க முடியாமல், கடைகாரர் சொல்வது ஏதும் புரியாமல் குழந்தைகளும் அமைதியாக அங்கிருந்து செல்கின்றனர்.
பெரியாரின் பிறந்தநாளில் வைரலாகும் வீடியோ!
சாதி பாகுபாடுக்கு எதிராக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் 144வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பள்ளி படிக்கும் குழந்தைகளிடம் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் தீண்டாமை கடைபிடிக்கும் கடைக்காரரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து பள்ளி குழந்தைகளை பாதிக்கும் வகையில் பேசிய கடைகாரரையும், ஊர் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்திய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று பலரும் ட்விட்டரில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
