இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சிறைகளிலும் சாதிய ரீதியான பாகுபாடுகள் இனி இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இன்று(அக்டோபர் 3) உத்தரவிட்டுள்ளது.
சுகன்யா சாந்தா என்கிற பத்திரிகையாளர் கடந்த 2020 ஆண்டு டிசம்பர் 10 அன்று ‘தி வயர்’ ஆங்கில பத்திரிகையில், இந்தியாவில் உள்ள 11 மாநில சிறைகளில் நடைமுறையில் இருக்கும் சாதிய ரீதியான பாகுபாடுகள் பற்றி “From Segregation to Labour, Manu’s Caste Law Governs the Indian Prison System என்கிற கட்டுரை எழுதியிருந்தார்.
அதில் சிறைகளில் சாதியின் அடிப்படையில் கைதிகளுக்கு வேலை வழங்கப்படுவது பற்றி விரிவாக எழுதப்பட்டிருந்தது. இந்த நடைமுறையை எதிர்த்து 2023 வருடம் சுகன்யா சாந்தா உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஜனவரி மாதம் உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, பஞ்சாப், ஒடிஷா, ஜார்கண்ட், கேரளா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 11 மாநிலங்களுக்கு இது குறித்து நோட்டீஸ் அனுப்பியது.
பின்னர் கடந்த ஜூலை மாதம் 10ஆம் தேதி நடந்த விசாரணையில் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது.
அரசியலமைப்பிற்கு எதிரானது
இந்த நிலையில் இன்று இந்த வழக்கை இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட், ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா அமர்வு விசாரித்தது.
சுகன்யா சாந்தா சார்பாக மூத்த வழக்கறிஞர் எஸ்.முரளிதர், வழக்கறிஞர்கள் பிரசன்னா.எஸ் மற்றும் திஷா வாடேகர் ஆஜரானார்கள்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, கீழ்கண்ட அறிவுறுத்தல்களை மத்திய அரசாங்கத்திற்கும் சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்களுக்கும் வழங்கியது:
ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த கைதிகளுக்கு மட்டும் பெருக்குவது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளை வழங்குவது அரசியலமைப்பு பிரிவு 15க்கு எதிரானது. இதற்கு வழிவகுக்கும் சிறைக் கையேடு விதிமுறைகள் நீக்கப்படவேண்டும்.
இதற்குத் தேவையான திருத்தங்களை மாதிரி சிறைக்கையேடு 2016-இல் மத்திய அரசங்கம் செய்யவேண்டும். அந்தந்த மாநிலங்களும் தங்களது சிறைக்கையேட்டில் இதற்குத் தேவையான திருத்தத்தைச் செய்யவேண்டும்.
இந்த வழக்கை, சூ மோட்டோவாக ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இனிமேலும் சிறைகளில் சாதி, மதம், பாலினம் அடிப்படையில் பாகுபாடுகள் நடைப்பெற்றால், அதை ‘In Re: Discrimination Inside Prisons in India.’ என்ற பெயரில் விசாரிக்கப்படும் என்று கூறியது.
அதுமட்டுமல்லாமல் மூன்று மாதத்திற்குப் பின் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் பொருத்தமான அமர்வு முன் விசாரணைக்கு வைக்க வேண்டும் என்றும், அப்போது எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஷாப்பிங் மால் திறக்க போன பிரியங்கா மோகன்… அப்படியே கவிழ்ந்த பரிதாபம்!
