சார்பதிவாளர் அலுவலகங்களில் ரூ. 20,000க்கு மேல் ரொக்க பரிமாற்றம் இருக்கும் ஆவணங்கள் தொடர்பான விவரங்களை வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பதிவுத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணத்தைத் தடுக்கும் மத்திய அரசின் முயற்சிகளை வலுப்படுத்த, சார்பதிவாளர் அலுவலகங்களில் ரூ. 20,000க்கு மேல் ரொக்க பரிமாற்றம் இருக்கும் ஆவணங்கள் தொடர்பான விவரங்களை வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்
ஆவண சரிபார்ப்பு
பதிவு அலுவலர்கள், ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட பணம் செலுத்துதல் விவரங்களைச் சரிபார்த்து, ரூ.20,000-க்கு மேல் ரொக்க பரிவர்த்தனைகள் உள்ளதா என உறுதி செய்ய வேண்டும். அதில் ரொக்க பரிவர்த்தனைகள் குறிப்பிடப்பட்டிருந்தால், ஆவணப் பதிவுக்குப் பிறகு, அவற்றின் நகலுடன் உடனடியாக வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விவரங்கள் எதிர்கால குறிப்புக்காக ஆவணத்துடன் ஸ்கேன் செய்து பாராமரிக்கப்பட வேண்டும்.
இதை முறையாக அறிவிக்க தவறினால் அல்லது தாமதித்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர் மூலம் மண்டல துணை ஆய்வாளர் ஜெனரல்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, தவறு செய்த அலுவலர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகள் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தணிக்கை மேற்பார்வை
மாவட்ட பதிவாளர்கள் ஆவணப் பதிவுகளை தணிக்கை செய்யும் போது, இந்த வழிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட பதிவாளர்கள் மற்றும் துணை ஆய்வாளர் ஜெனரல்கள் இதை உரிய முறையில் மேற்பார்வையிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அட்வைஸ்
இந்த உத்தரவு, பொதுமக்களின் ரொக்கப் பரிவர்த்தனைகளைக் குறைத்து, வங்கி மற்றும் ஆன்லைன் கட்டண முறைகளை ஊக்குவிக்கிறது. இணையதளம் மூலம் முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தலாம். வருமான வரித்துறையின் விதிகளைப் பின்பற்றி, சட்டவிரோத பரிவர்த்தனைகளைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
