கோவை எட்டிமடை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா, தமிழகம், கேரளா என 3 மாநிலங்களை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சேலம் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது நகை பணம் திருட்டு, ஹவாலா பண பரிமாற்றம் உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெற்று வருகிறது. இதனால் தொடர்ச்சியாக நெடுஞ்சாலை பகுதியில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 2) பாலக்காடு சாலை க.க.சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள எட்டிமடை சிறப்பு சோதனை சாவடியில், போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் காவல்துறையினர் சோதனையிட்டனர். அப்போது இருசக்கர வாகன இருக்கைக்கு அடியில் ரூ.30 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடம் காவல் துறையினர் விசாரணையின் ஈடுபட்டனர். விசாரணையில் பணத்தை எடுத்து சென்றவர் கந்தே கவுண்டர் சாவடியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பது தெரியவந்தது. அவர் சூர்யா குரூப்ஸ் என்ற கம்பெனியில் இருந்து கேஎம்எஸ் என்ற நிறுவனத்திற்கு பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
கட்டுமான பணிக்கு பொருட்கள் வாங்கியதற்காக பணம் கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவரிடம் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் காவல்துறையினர் அவரிடம் இருந்த ரூ.30 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் சுரேஷ் குமாரையும், அவரிடம் பறிமுதல் செய்த பணத்தையும் க.க. சாவடி போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
