டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா நேற்று (மார்ச் 20) மாலை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் கூடிய கொலீஜியம் கூட்டத்துக்குப் பிறகு அவசரமாக அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார். Cash found at judge’s house
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் சர்மாவின் அதிகாரபூர்வ வீட்டில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது நீதிபதி வீட்டில் இல்லை. அவரது குடும்பத்தினர் தீயணைப்புத் துறைக்கும், போலீஸுக்கும் தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சென்ற தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் 15 நிமிடங்களில் தீயை அணைத்தனர். ஆனால், அதன் பிறகுதான் மிகப்பெரிய பரபரப்புத் தீ பற்றப் போகிறது என அவர்களுக்குத் தெரியவில்லை.
ஸ்டோர் ரூமில் ஏற்பட்ட மைனர் தீயை அணைத்துவிட்டு, அதன் பிறகு தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் என்ன என்பதை மதிப்பிடும் பணியைத் தொடங்கினர். அப்போதுதான் நீதிபதி வீட்டில் உள்ள அறையில் கட்டுக் கட்டாய் பெருமளவு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தீயிலும் பணம் எரிந்தது கண்டறியப்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக தங்கள் உயர் அதிகாரிகளுக்கு இதை தெரிவித்தனர், அதன் பின் உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாய் பணம் இருந்தது தொடர்பாக மத்திய அரசு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் நடந்து ஆறு நாட்கள் ஆன நிலையில் நேற்று (மார்ச் 20) மாலை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா டெல்லியில் உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூட்டத்தைக் கூட்டினார்.
”இந்த சம்பவம் நீதித்துறை மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. உடனடியாக நீதிபதி வர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கொலீஜிய உறுப்பினர்கள் அனைவரும் வலியுறுத்தியுள்ளனர். Cash found at judge’s house
அவரை டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்யவேண்டும் சில கொலீஜிய உறுப்பினர்கள் தெரிவிக்க, மேலும் சில உறுப்பினர்களோ, ‘நீதித்துறையின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க அவரை இடமாற்றம் செய்வது மட்டும் போதாது. அவரை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும். அவர் பதவி விலக மறுத்தால், அவர் மீது உள்ளக விசாரணையைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தலைமை நீதிபதி முடிவெடுக்க வேண்டும்’ என அழுத்தமாக கூறினர்.
இந்நிலையில் கொலீஜியம் கூட்டம் முடிந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, அவர் ஏற்கனவே பணிபுரிந்த அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கே மாற்றப்பட்டிருக்கிறார்.
ஒரு நீதிபதிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தால் அதைக் கையாள்வதற்கு நீதித்துறையில் நிலையான வழிகாட்டுதல்கள் உள்ளன.
அதன்படி முதலில் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதியிடம் விளக்கம் கோர வேண்டும். இதைத் தொடர்ந்து, ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் இரண்டு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அடங்கிய ஒரு உள்ளக விசாரணைக் குழு அமைக்கப்படும்.
உள்ளக விசாரணையில் நீதிபதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இந்த விவகாரம் நாடாளுமன்றத்திற்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்படலாம், இதைத் தொடர்ந்து அந்த நீதிபதி பதவி நீக்கம் செய்யப்படலாம். Cash found at judge’s house
இதில் வேதனையான விசேஷம் என்னவென்றால்… கட்டுக் கட்டாய் பணம் கைப்பற்றப்பட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மா டெல்லி உயர் நீதிமன்ற கொலீஜியத்தின் மூத்த உறுப்பினராக உள்ளார் என்பதே.