திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான வழக்குகள் ரத்து!

Published On:

| By Kalai

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீது தொடரப்பட்ட நில அபகரிப்பு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள ‘குரோம் லெதர்’ தொழிற்சாலைக்கு சொந்தமாக இருந்த நிலங்கள், 1982ஆம் ஆண்டில் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் நகர்ப்புற நில உச்ச வரம்பு சட்டத்தின்கீழ் அரசுடைமையாக்கப்பட்டன.

அந்த நிலங்களை நீராதாரங்களுக்கு பயன்படுத்தும் வகையில் 1984ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில், 1996ஆம் ஆண்டில் குரோம் தோல் தொழிற்சாலை தலைவராக இருந்த, தற்போதைய திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், 1.55 ஏக்கர் நிலத்தை, நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின் விதிகளை மீறி, 41 பயனாளிகளுக்கு பிரித்துக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது  தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவர் அளித்த புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார், நில அபகரிப்பு, போலி ஆவணங்கள் தயாரித்தது என இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர்.

இந்த வழக்குத் தொடர்பாக ஆதாரங்களை சேர்ப்பதற்காக பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நில ஆவணங்களை சிபிசிஐடி போலீஸார் 2020 அக்டோபர் 27 ஆம் தேதி ஆய்வு செய்தனர். அங்கிருந்து சில ஆவணங்களின் நகலை எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று(செப்டம்பர் 23) நடைபெற்றது.

மனுதாரர்  தரப்பில், “ஏற்கனவே இது தொடர்பாக வழங்கப்பட்ட புகாரில் முகாந்திரம் இல்லை என்று காவல்துறை முடித்து வைத்ததாகவும், மனுதாரருக்கும் இந்த சொத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றும் வாதிடப்பட்டது.

புகாரில் எந்த உண்மைத்தன்மையும் கிடையாது என்றும், இது தொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட சிவில் வழக்குகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில் இந்த வழக்கு களங்கம் ஏற்படுத்த தொடரப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

கலை.ரா

செப் -26 ல் அமைச்சரவைக் கூட்டம்!   

அவசர தேவை – நிலம் கையகப்படுத்தப்படுவது தவறு : உயர் நீதிமன்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share