தவெக கொடிக்கு எதிரான வழக்கில் பதிலளிக்க அக்கட்சியின் தரப்பில் அவகாசம் கேட்ட நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக அரசின் பதிவுத் துறை மூலம் தங்கள் அமைப்பின் வணிக முத்திரையாக பதிவு செய்யப்பட்டுள்ள சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு தடை விதிக்கக் கோரி, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த ஜூலை 31ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்த பதில்மனுவில், “கொள்கை அடையாளமாகவே அரசியல் கட்சிக் கொடியை பயன்படுத்துகிறது. இதில் வர்த்தக நடவடிக்கையோ, பொருளாதார பரிவர்த்தனையோ ஏதும் இல்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என கோரியிருந்தார். மேலும் கொடிகளில் நிறங்களை பயன்படுத்துவதற்கு வணிக முத்திரை பதிவின்போது விளக்கம் அளித்துள்ளாரா? ‘ என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனையடுத்து தவெக பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்க தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தவெக கட்சியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி அவகாசம் கேட்டார்.
இதனை ஏற்ற நீதிபதிகள் அமர்வு வழக்கு விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
