திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் கந்தூரி விழாவின் போது ஆடு, கோழி பலியிட தடைகோரி தொடரப்பட்ட வழக்கில் தர்கா நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் சந்தனக்கூடு விழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. வரும் ஆறாம் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு கந்தூரி விழாவின் போது ஆடு கோழி பலியிட எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை பகுதியில் ஆடு கோழி பலியிட தடை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு சிக்கந்தர் தர்காவில் கந்தூரி விழாவின் போது ஆடு, கோழி பலியிட தடை விதிக்கக் கோரி சோலையழகு புரத்தைச் சேர்ந்த மாணிக்க மூர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், திருப்பரங்குன்றம் மலை மீது உயிர் பலியிடவோ, அசைவ உணவு பரிமாறவோ கூடாது என ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு கந்தூரி விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார்.
இதை தொடர்ந்து நீதிபதி கந்தூரி விழாவிற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தர்கா நிர்வாகத்தின் மேலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி இரண்டாம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். அதுவரை தற்போதைய நிலையே தொடர உத்தரவிடக்கோரி மனுதாரர் தரப்பு கோரிக்கை வைத்தது. அதை ஏற்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
முன்னதாக திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆனால் கோயில் நிர்வாகம் மரபுப்படி தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றியது. இதைத் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவும், தீபத்தூணும் அருகருகே இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறி தமிழக அரசு வாதிட்டு தீபத்தூணில் தீபம் ஏற்ற மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகளும், பாஜகவினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது கந்தூரி திருவிழாவின் போது ஆடு, கோழி பலியிட தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது திருப்பரங்குன்றம் மலை பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
