சன் டிவி தொடர்ந்த வழக்கு: கோர்ட்டில் ஆஜரான திருமாவளவன்

Published On:

| By Aara

case filed by sun tv thirumavalavan appeared in court

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் இன்று (பிப்ரவரி 9) பகல் 12 மணியளவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அரசியல் ரீதியான வழக்கு விசாரணைக்காக திருமாவளவன் ஆஜராகியிருக்கிறார் என்று அவரது கட்சியினர் சொல்ல… கொஞ்சம் விசாரித்தபோதுதான் அது சன் டிவி தொடர்ந்த வழக்கு என்று தெரியவந்தது.

திருமாவளவன் மீது சன் டிவி ஏன் வழக்குத் தொடர்ந்தது?

”விடுதலை சிறுத்தைகள் கட்சிக்காக வெளிச்சம் தொலைக்காட்சி சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் கட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் திரைப்படங்களும் ஒளிபரப்பப்படும்.

அப்படி வெளிச்சம் டிவி ஊழியர்கள் டிவியில் போட்ட இரண்டு சினிமா படங்கள்தான் இன்று திருமாவளவனை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

அந்த இரு சினிமாக்களின் ஒளிபரப்பு உரிமை சன் டிவியிடம் உள்ளது. இது தெரிந்தோ தெரியாமலோ விடுதலை சிறுத்தைகளின் வெளிச்சம் டிவியில் ஒளிபரப்பப்பட்டன.

இதையடுத்து 2019 ஆம் ஆண்டு சன் டிவி சார்பில் வெளிச்சம் டிவி நிர்வாக நிறுவனர் மருதம் டெலிவிஷன் பிரைவேட் லிமிடெட்டுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வெளிச்சம் டிவிக்கு நிர்வாக இயக்குனராக திருமாவளவன் இருப்பதால் அவர்தான் இதற்கு சட்டப்படி பொறுப்பு என்ற அடிப்படையில் அவர் சார்பாக பதிலும் அனுப்பப்பட்டது.

ஆனாலும் சன் டிவி சார்பாக மருதம் டெலிவிஷன் நிறுவனத்தின் மீது சிவில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த திருமாவளவனுக்கு, கடந்த ஆண்டு ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

அந்த வழக்கில்தான் திருமாவளவன் இன்று (பிப்ரவரி 9) சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் ஆஜரானார்.

“இனிமேல் இதுபோன்ற உரிமம் பெறாத திரைப்படங்களை ஒளிபரப்பமாட்டோம்,  ஏற்கனவே ஒளிபரப்பியதற்காக சன் டிவி நிறுவனத்திடம் வருத்தத்தை பதிவு செய்துகொள்கிறேன்” என்று திருமாவளவன் கூறியதை அடுத்து வழக்கை பிப்ரவரி 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, “எதிர்காலத்தில் இவ்வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்” என்றும் உத்தரவிட்டார்.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மனைவியை சாடிய தந்தை : கோபத்தில் கொந்தளித்த ஜடேஜா

நரசிம்ம ராவ், சரண் சிங், எம்.எஸ்.சுவாமிநாதன் : ஒரே நாளில் 3 பாரத ரத்னா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share