மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணையை வரும் மே 20-ந் தேதிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் பெஞ்ச் இன்று ஒத்திவைத்தது.
மத்திய அரசின் வக்பு சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. திமுக, விசிக, தவெக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் வக்பு சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளன.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வக்பு சட்டத்தை செயல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்தது. அதாவது புதிய வக்பு சட்டத்தின் படி, வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத ஒருவரை உறுப்பினராக நியமிப்பது மற்றும் வக்பு சொத்துகளை வகைப்படுத்துவது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிப்பது ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பிஆர் கவாய் பெஞ்ச் முன்பாக இன்று வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்குகள் விசாரணைக்கு வந்தன. இன்றைய விசாரணையின் போது ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தலைமை நீதிபதி தற்போதுதான் பொறுப்பேற்றுள்ள நிலையில் அவருக்கு கால அவகாசம் தேவை; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் ஏற்கனவே விரிவான பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது; இந்த வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கலாம் என்றார். இதேபோல மனுதாரர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் வழக்கை அடுத்த வாரம் ஒத்திவைக்கலாம் என சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கின் விசாரணை மே 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், புதிய வக்பு சட்டத்தின் கீழ் முஸ்லிம் அல்லாதவர்களை வக்பு வாரியத்தில் உறுப்பினராக்குவது; வக்பு சொத்துகளை வகைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை தற்காலிகமாக மேற்கொள்ளமாட்டோம் எனவும் மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது.