ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்திற்கு வழங்கப்பட்ட ‘ஏ’ சான்றிதழை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 25) ஒத்திவைத்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா மற்றும் அமீர்கான் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், இப்படம் உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இப்படத்திற்கு ’ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது குறித்து கேள்விகள் எழுந்த நிலையில், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தை (CBFC) எதிர்த்து தயாரிப்பு நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு கடந்த 20ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தயாரிப்பு நிறுவனம் கடந்த ஜூலை 28ஆம் தேதி கூலி படத்தின் CBFC சான்றிதழுக்கு விண்ணப்பித்தது. அதன்படி தணிக்கை பணிகள் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி நிறைவடைந்து சுமார் 10 நாட்களுக்குப் பிறகு தான் படம் திரையரங்குகளில் வெளியானது. அதன் பிறகு ஒரு வாரம் கழித்து, தற்போது திடீரென U/A சான்றிதழ் கோரி உயர் நீதிமன்றத்தை படத் தயாரிப்பு நிறுவனம் அணுகியுள்ளது. இவ்வளவு நீண்ட தாமதத்திற்குப் பிறகு இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய தேவையில்லை. எனவே CBFC பதில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும்” என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோரினார். அவரது கோரிக்கையை ஏற்று வழக்கை ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம்.
அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது.
கேஜிஎஃப், பீஸ்ட் ஒப்பிடும்போது வன்முறை குறைவு தான்!
அப்போது சன் டிவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜே.ரவீந்திரன் , ”கேஜிஎஃப், பீஸ்ட் போன்ற படங்களுடன் ஒப்பிடும்போது, கூலி திரைப்படம் வன்முறையைக் குறைவாகக் காட்டியது. அதற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது தவறு” என வாதிட்டார்.
மேலும், “பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தி, அதற்குரிய வன்முறையை மட்டுமே சித்தரித்தது. இது சட்டத்தின் கீழ் தடைசெய்யப்படவில்லை. இந்தப் படம் கூலித் தொழிலாளியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைக் காட்டியது. ஏதேனும் வன்முறை இருந்தால், அது படத்தின் ஒரு பகுதி மட்டுமே. அதனை மிகைப்படுத்திக் காட்டவில்லை. இந்தப் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும்போது, அதை நிபுணர்களாகப் பார்க்காமல், ஒரு சாதாரண நபரின் பார்வையில் இருந்து பார்க்க வேண்டும்” என்று ரவீந்திரன் வாதிட்டார்.
குழந்தைகள் பார்க்க முடியாது!
அப்போது சிபிஎஃப்சி சார்பாக ஆஜரான ஏஎஸ்ஜி ஏஆர்எல் சுந்தரேசன், ”படத்தின் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே “ஏ” சான்றிதழை ஏற்றுக்கொண்டனர். அது தணிக்கை வாரியத்தால் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு. மேலும், திரைப்படத்திற்கு சான்றிதழ் அளிக்கும் போது, குழு உறுப்பினர்கள் படத்தில் அடிக்கடி சண்டைக் காட்சிகள், அச்சுறுத்தும் தருணங்கள், கொடூரமான கொலை, புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் அவ்வப்போது கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டனர்” என்றார்.
மேலும், “திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கருத்து சுதந்திரம் இருந்தாலும், குழந்தைகள் படத்தைப் பார்க்க அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதுதான் கேள்வி. தணிக்கைக் குழுவில் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் படத்தை பெரியவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்று ஒருமனதாக கருத்து தெரிவித்துள்ளனர். குழந்தைகள் படத்தைப் பார்க்க விரும்பினால், சில காட்சிகள் கட் செய்யப்பட வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, அதற்கு அவர்கள் தயாராக இல்லை.
திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு கூலியை அவரவர் சொந்த எண்ணத்தில் எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாம், ஆனால் அந்த சித்தரிப்பில் வன்முறை இருந்தால், அதை குழந்தைகள் பார்க்க முடியாது” வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தமிழ் செல்வி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்தார்.
