அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. Case against Senthil Balaji
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்டோர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்கு தடை கேட்டும், ரத்து செய்ய கோரியும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று (மார்ச் 21) நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில், “வெவ்வேறு பதவிகளுக்கு பணம் பெற்றது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சேர்த்து விசாரிக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.
அனைத்து வழக்குகளையும் சேர்த்து விசாரித்தால் வழக்கு விசாரணை முடங்கும்.
2000க்கும் அதிகமான குற்றம் சாட்டப்பட்டவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் 600 க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தி முடிக்க நீண்ட காலமாகும் என்பதால் வழக்குகளை தனித்தனியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது.
காவல்துறை சார்பில், வழக்கின் குற்றச்சாட்டுகள் ஒரே மாதிரியானவை. எனவே அனைத்து வழக்குகளையும் சேர்த்து விசாரிப்பது குறித்து உச்ச நீதிமன்றத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்குகளை சேர்த்து விசாரிப்பது என்பது சிறப்பு நீதிமன்றத்தின் முடிவு என்று வாதிடப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், “வழக்குகளை தனித்தனியாக விசாரித்ததால்தான் காலதாமதம் ஆகும். எனவே ஒன்றாக சேர்த்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது சரிதான் என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். Case against Senthil Balaji