நெற்பயிர்களை அழித்து என்.எல்.சி கால்வாய் வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 31) அனுமதி வழங்கியுள்ளது.
விளைநிலங்களை அழித்து 2வது நிலக்கரி சுரங்கத்தில் இருந்து பரவனாற்றுக்கு உபரிநீரை வெளியேற்றுவதற்காக கால்வாய் அமைக்கும் பணிகளை என்.எல்.சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி, கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி வாய்க்கால் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
கதிர்விட்டு அறுவடைக்கு தயாராகி வந்த நெற்பயிர்களை அழித்து 10-க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்கள் மூலம் என்.எல்.சி கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் நிலத்திற்கான உரிய நிவாரணத்தையும் இழப்பீட்டையும் என்.எல்.சி வழங்கவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் நெற்பயிர்களை அறுவடை செய்து முடிக்கும் வரை என்.எல்.சி விவசாயிகளுக்கு தொல்லை கொடுக்க கூடாது என்று உத்தரவிட கோரி விவசாயி முருகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில் நிலம் கையகப்படுத்தப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் இருந்தால் அதனை உரிமையாளரிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
விவசாயி முருகன் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி பாமக வழக்கறிஞர் பாலு நீதிபதியிடம் முறையிட்டார். அதனை நீதிபதி ஏற்றுக்கொண்ட நிலையில் இந்த வழக்கு இன்று மதியம் 2.15 மணிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.
மோனிஷா
எப்படி பிசிசிஐ செயலாளர் ஆனார் ஜெய் ஷா?: உதயநிதி சொன்னது உண்மையா?