அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published On:

| By Kavi

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று (ஜனவரி 9) தள்ளுபடி செய்துள்ளது. 

கடந்த 2022 ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். 

ADVERTISEMENT

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி சென்னை சிவில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். 

அதில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். 

ADVERTISEMENT

இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று சிவில் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி முறையீடு செய்தார். ஆனால் அவரது முறையீட்டை சிவில் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. 

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சூரியமூர்த்தி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது.. 

ADVERTISEMENT

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி மேல்முறையீடு செய்தார். 

இந்த மனுவை நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே அமர்வு இன்று விசாரித்தது.

அப்போது மனுதாரர் சார்பில் கட்சி விதிமுறைகளை மீறி நடைபெற்ற இந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என்று வாதம் முன்வைக்கப்பட்டது. 

எடப்பாடி பழனிசாமி சார்பில், அதிமுகவில் உறுப்பினராக இல்லாத ஒருவர் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதைக் கேட்ட நீதிபதிகள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share