ADVERTISEMENT

ED சம்மனை எதிர்த்த வழக்கு : பொதுத் துறை செயலாளர் ஆஜராக உத்தரவு!

Published On:

| By Kavi

அமலாக்கத் துறை சம்மனை எதிர்த்த வழக்கின் விசாரணைக்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், பொதுத் துறை செயலாளர் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்ததை விட, கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்து, சட்டவிரோத பண பரிவர்த்தனைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.

ADVERTISEMENT

இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் பல இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.

மணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், வேலூர் மாவட்டங்களின் ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா , ஓய்வுப் பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் உள்ளிட்ட பலருக்கு அமலாக்கத்துறை சார்பாக சம்மன் அனுப்பப்பட்டது.

ADVERTISEMENT

இந்த சம்மனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அமலாக்கத் துறை சம்மனுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராவதில் என்ன சிக்கல்? என்று கேள்வி எழுப்பியது.
அதோடு விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு ஆட்சியர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி 5 மாவட்ட ஆட்சியர்களும் அமலாக்கத் துறை விசாரணைக்கு நேரில் ஆஜரானார்கள்.

இந்தநிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் 5 மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு மீண்டும் இன்று(நவம்பர் 28) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் முன் அமலாக்கத் துறை சார்பில், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரரேசன் ஆஜராகி, “ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு தடை விதித்த உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஆட்சியர்கள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

அதனால், இந்த வழக்கை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்லை என்ற இந்த மனு காலாவதி ஆகிவிட்டது” என்று கூறினார்.

இந்த வழக்கு விசாரணைக்கு தமிழக அரசு தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.

அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞர் ஆஜராகாததற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து மனுதாரர் என்ற முறையில் பொதுத் துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

வழக்கு விசாரணையை நாளை (நவம்பர் 29) ஒத்திவைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

இசைவாணி, பா ரஞ்சித் மீது மேலும் 2 புகார்கள்!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட முருங்கைக்காய், பூண்டு விலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share