தேர்தல் பிரமாண பத்திரத்தில் திமுக அறக்கட்டளை குறித்த தகவலை தெரிவிக்கவில்லை என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், தனது வேட்பு மனுவில் திமுக அறக்கட்டளை மற்றும் சொத்து விவரங்களை மறைத்துள்ளார் என்றும் இது தொடர்பாக தேர்தல் ஆணைய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் திருஞானசம்பந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று ( ஜூலை 27) தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில், அஞ்சுகம் அறக்கட்டளை விவரங்களை தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் ஸ்டாலின் திமுக அறக்கட்டளை குறித்த விவரத்தை தெரிவிக்கவில்லை என்று வாதிடப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தரப்பில், படிவம் 26 இல் அறங்காவலர் பொறுப்பு தொடர்பான விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பாக தமிழில் தாக்கல் செய்யப்பட்ட சில ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
