தேவேந்திர குல வேளாளர் சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு!

Published On:

| By Balaji

தேவேந்திர குல வேளாளர் சட்டத்திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டதால், அதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், தேவேந்திர குலத்தார், குடும்பர், பள்ளர், கடையர், காலாடி, பண்ணாடி, வாதிரி ஆகிய உட்பிரிவுகளைச் சேர்ந்த மக்களை, ‘தேவேந்திர குல வேளாளர்’ என, ஒரே பெயரில் அழைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ‘தேவேந்திர குல வேளாளர்’ சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு, நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்து கரூரைச் சேர்ந்த கார்வேந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றுதாக்கல் செய்தார். அதில், ” இந்த சட்டமசோதா மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எம்.பி. கூட இல்லாதபோது நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களின் அரசியல் லாபத்துக்காகவும், தேர்தல் ஆதாயத்துக்காகவும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல். இந்த சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் பெறுவதற்கான நடைமுறைகளை நிறுத்தக் கோரியும், அரசிதழில் வெளியிட கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று(ஏப்ரல் 17) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. அப்போது, இந்த சட்டதிருத்த மசோதாவுக்கு ஏற்கனவே குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டார் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கார்வேந்தன் தொடுத்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

**வினிதா**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share