சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்படும் நவீன மீன் அங்காடியை தொடங்கக்கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சிந்தாதிரிப்பேட்டையில் இயங்கி வரும் மீன் அங்காடிக்கு பதிலாக புதிய நவீன மீன் அங்காடியை 2.21 கோடி மதிப்பீட்டில் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மொத்தமாக 102 கடைகள் அமைக்கப்பட உள்ளன.
ஆனால் இந்த அங்காடியில் திடக்கழிவு மேலாண்மையை முறையாக அமல்படுத்தாமல் அங்காடியை தொடங்கக்கூடாது என உத்தரவிடக்கோரி பசுமை பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் சையது கட்டுவா சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(ஜனவரி 13) வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், 1022 சதுர மீட்டர் பரப்பில் அமையவுள்ள, நவீன மீன் அங்காடி, திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் சுத்திகரிப்பு, வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் திடக்கழிவு மேலாண்மை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை.
மீன் அங்காடியில் முறையான திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் சுத்திகரிப்பு வசதி ஆகியவற்றை ஏற்படுத்தாவிட்டால் அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீன் கழிவுகள் கூவம் ஆற்றில் கொட்டப்பட வாய்ப்புள்ளதால், கூவத்தை சீரமைக்கும் நடவடிக்கைகள் வீணாகும். எனவே திடக்கழிவு மேலாண்மை, சுத்திகரிப்பு மையங்கள் அமைக்காமல் இந்த மீன் அங்காடியை தொடங்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
அதுபோன்று நவீன மீன் அங்காடியில் முறையான வாகன நிறுத்தம் தூய்மை வசதிகள் செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
பாட்ஷா 30 ஆண்டுகள்: ரீ ரிலீஸ்… எப்போது?
ஆண்டுக்கு 3000 பேருக்கு வேலைவாய்ப்பு : தலைவாசல் கால்நடை பூங்கா திறப்பு!